சன்னல்களைச் சுத்தம் செய்யும்போது உயரத்தில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டுப் பணிப்பெண் தொடர்பான சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பவம், வியாழக்கிழமை (அக்டோபர் 8) நடந்தது.
அன்று காலை 10.30 மணியளவில் ரிவர்வேல் டிரைவில் உள்ள புளோக் ‘121ஏ’யிலிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு அது பதில் அளித்தது.
ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இணையத்தில் பரவிவரும் காணொளியில், மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் பெண் ஒருவர், கட்டடத்தின் கீழ்த்தளத்தில் விழுந்துகிடப்பதும் அவருக்கு அருகில் தரையில் சன்னல் துடைக்கும் கருவி போன்ற ஒன்று கிடப்பதும் தெரிகிறது. அவருக்கு மூன்று SCDF அதிகாரிகள் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெளிநாட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பை அனைத்து நேரங்களிலும் உறுதி செய்வதற்கு முதலாளிகளே முழுப் பொறுப்பு என்பதை மனிதவள அமைச்சு அறிக்கையொன்றில் நினைவூட்டியது.
சன்னல்களைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்யும்போது, இல்லப் பணிப்பெண்கள் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு முதலாளிகள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அமைச்சு கூறியது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் முதலாளிகள் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க வேண்டும். இந்த விதிமுறையை மீறுவோர்க்கு $10,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும். அவர்கள் மீண்டும் இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் தடை விதிக்கப்படக்கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
