ஒரு குழந்தையைக் கடித்துக் கிள்ளிய பணிப்பெண் ஒருவருக்கு வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளியான பணிப்பெண் அந்த 11 மாதக் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தார். குழந்தை உறங்காமல் இருந்ததால் கோபமடைந்து அவ்வாறு செய்ததாக மியன்மாரைச் சேர்ந்த அவர் ஒப்புக்கொண்டார் என்று சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
குழந்தையை உறங்க வைத்தப் பிறகுதான் தனக்கு உறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதென அவர் கூறினார். அதனால் தினமும் நள்ளிரவுக்குப் பிறகுதான் தன்னால் உறங்க முடிந்ததென்று 24 வயதாகும் அவர் தெரிவித்தார்.
தினமும் தனக்குப் போதுமான உறக்கம் கிடைக்கவில்லை என்று அவர் மியன்மார் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனினும், மாவட்ட நீதிபதி பால் சான் அதை அதிகம் கருத்தில்கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்கக் குற்றவாளியின் பெயரையும் அடையாளத்தையும் வெளியிட அனுமதி வழங்கப்படவில்லை.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதியன்று பணிப்பெண், குழந்தையின் இடது கையில் கடிப்புக் காயம் இருந்ததைப் பணிப்பெண்ணின் முதலாளி கண்டார். முதலில் குழந்தைத் தன்னைத் தானே கடித்துக்கொண்டது எனக் கூறிய பணிப்பெண், தான் அவ்வாறு செய்ததைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி மூலமாகவும் குழந்தையின் தாயார் பணிப்பெண்ணின் நடவடிக்கைகளை உணர்ந்தார்.

