முதலாளியின் தந்தையைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

முதலாளியின் தந்தையைக் கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

2 mins read
7fddbdf3-2c37-47d8-8e93-e953db62a8eb
உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பணிப்பெண்ணாக வேலை செய்ய சிங்கப்பூருக்கு வந்த மாது ஒருவர் இங்கு தனது முதலாளியின் குடும்பத்துடன் நல்ல உறவை வைத்திருந்தார்.

ஆனால், பிறகு அவர் அதே குடும்பத்திடமிருந்து திருடியிருக்கிறார். மூன்று முறை அவர் மோசடிகளுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் முதலாளி வீட்டில் திருடியிருக்கிறார்.

பராமரிப்பு தேவைப்பட்ட ஆடவர்

பணிப்பெண் திருடியதை அவரின் முதலாளிக் குடும்பம் கண்டுபிடித்தது. ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய 73 வயது ஆடவர் ஒருவரைப் பராமரிக்க அவரின் உதவி தேவைப்பட்டது அதற்குக் காரணம்.

ஒரு நாள் பிற்பகலில் அந்த அடவர், பணிப்பெண் திருடியதாகப் போலியாகக் குற்றஞ்சாட்டினார். ஆத்திரமடைந்த பணிப்பெண், அந்த ஆடவரைத் தலையணையால் மூச்சுத் திணறச் செய்து கொன்றார்.

சுமியாத்தி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த 53 வயது இந்தோனீசியப் பணிப்பெண்மீது கொலை செய்ததாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. புதன்கிழமை (ஜூலை 29) அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திரு லோவ் ஹூன் சியோங் என்ற ஆடவரைக் கவனித்துக்கொள்ளவும் வீட்டு வேலைகளைச் செய்யவும் சுமியாத்தி கடந்த 2019ஆம் ஆண்டு வேலைக்கு எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பீ‌ஷான் ஸ்திரீட் 23ல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 222ல் அவர், திரு லோவ், அவரின் மனைவி, மகள் ஆகியோருடன் வசித்துவந்தார்.

2021ஆம் ஆண்டில் சுமியாத்தியின் ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பு அவரின் முதலாளிகள் அதை நீட்டித்தனர். அவ்வாண்டு இறுதியில் அவர் தனக்கு வழங்கப்படவேண்டிய சம்பளத்தை முன்னதாகவே கேட்டதுடன் முதலாளி குடும்பம், அவ்வீட்டில் வாடகைக்கு இருந்தவர் ஆகியோரிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்.

அவசர தேவைகளுக்காகப் பணம் தேவைப்பட்டதாக அவர் பொய் சொல்லியிருக்கிறார். பிறகு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுமியாத்தி திரு லோவின் மனைவியிடமிருந்து நகைகளைத் திருடத் தொடங்கினார்.

திருடியது தெரியவந்தது

தான் திருடியது தெரியவந்ததும் அவற்றை அடகு வைத்த சீட்டுகளைச் சுமியாத்தி ஒப்படைத்தார். குடும்பத்துக்கு உதவி தேவைப்பட்டதாகக் கூறி தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு முதலாளி குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டதால் அவர்கள் சுமியாத்திமீது காவல்துறையிடம் புகாரளிக்கவில்லை.

சுமியாத்தி மோசடிக்காரர்கள் மூவரிடம் பணத்தை இழந்ததாக அவரின் வழக்கறிஞர் முகம்மது முஸாமில் முகம்மது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நீதிமன்றம்ஆயுள்பணிப்பெண்தண்டனை