காவல்துறை அதிகாரியாகப் பாசாங்கு செய்து, வெளிநாட்டுப் பணிப்பெண்ணை அவரது நண்பர்களிடமிருந்து அழைத்துச் சென்று லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையம் அருகில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 48 வயது ஆடவர் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 3) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தின் எஃப் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள புதருக்குள் அப்பெண்ணைக் கொண்டு சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை அதிகாரியாக பாசாங்கு செய்ததாகவும் முன்னாள் எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியரான ஷர்வீன் செட்டி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மலேசியரான ஷர்வீன் செட்டி, கடைசியாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்காக வேலை செய்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையம் அருகில் ஷர்வீன் செட்டி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக உயர் நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அப்போது புல்வெளியில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
புல்வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்ளில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது காதலரும் அடங்குவர்.
சம்பவம் நிகழ்ந்தபோது அப்பெண்ணுக்கு 35 வயது.
அந்த வெளிநாட்டு ஊழியர்களை அணுகிய ஷர்வீன் செட்டி, தன்னைக் காவல்துறை அதிகாரியாக அடையாளப்படுத்திக்கொண்டு அவர்களிடமிருந்து அடையாள அட்டைகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மூவர் தங்கள் வேலை அனுமதி அட்டைகளை அவரிடம் தந்தனர்.
தமது சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவைப் பயன்படுத்தி அந்த வேலை அனுமதி அட்டைகளை ஸ்கேன் செய்வதுபோல ஷர்வீன் செட்டி நடித்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது அடையாள அட்டையை ஷர்வீன் செட்டி கேட்டபோது, வெளிநாட்டுப் பணிப்பெண்ணாகச் சிங்கப்பூரில் பணிபுரிய மனிதள அமைச்சு ஒப்பதல் அளித்த கடிதத்தை அப்பெண் அவரிடம் தந்தார்.
கைப்பேசியைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஷர்வீன் செட்டி அப்பெண்ணிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் அப்பெண் தமது கைப்பேசியை ஒப்படைத்தார்.
அப்பெண்ணை ஷர்வீன் செட்டி வேண்டுமென்றே அவரது நண்பர்களிடமிருந்து அழைத்துச் சென்றதாக அறியப்படுகிறது.
அதையடுத்து, அப்பெண்ணை ஷர்வீன் செட்டி அருகில் உள்ள புதருக்குள் கொண்டு சென்று அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ளத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலில் மறுப்பு தெரிவித்த அப்பெண், சிங்கப்பூரில் அவரும் அவரது நண்பர்களும் பணிபுரிய முடியாதபடி செய்துவிடப்போவதாக ஷர்வீன் செட்டி மிரட்டல் விடுத்ததும் எதிர்ப்பதைக் கைவிட்டார்.
அப்பெண்ணைத் தம்முடன் தகாத செயல்களில் ஈடுபட வைத்த ஷர்வீன் செட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறகு, அப்பெண்ணிடம் அவரது கைப்பேசியையும் மனிதவள அமைச்சின் கடிதத்தையும் திருப்பிக் கொடுத்தார்.
ஷர்வீன் செட்டி உண்மையான காவல்துறை அதிகாரி அல்ல என்று அப்பெண் தமது நண்பர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அப்பெண்ணை கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடையிலும் தொடையிலும் ஷர்வீன் செட்டியின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த பகுப்பாய்வாளர் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் இந்த வழக்கின் சாட்சிகள்.
வழக்கறிஞர் திரு முகம்மது பைரோஸ், ஷர்வீன் செட்டியைப் பிரதிநிதிக்கிறார்.

