முதலாளியின் மாமியாரைக் கொன்றதற்காக 2023ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண் ஒருவர், மேல்முறையீடு செய்ததில் அவர் மீதான குற்றச்சாட்டு மே 14ஆம் தேதியன்று நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.
24 வயது ஸின் மார் நிவேயின் வழக்கறிஞர் மேல்முறையீட்டில் தனது கட்சிக்காரர் ஆத்திரமூட்டப்பட்டதாக வாதாடினார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 25 தேதி முகவரிடம் திருப்பி அனுப்பப்போவதாக 70 வயது மூதாட்டி மிரட்டியதால் அவரை ஸின் 26 முறை கத்தியால் குத்தினார்.
வழக்கறிஞர் ஜோசபஸ் டான், ஆத்திரமடைந்ததால் அப்போது 17 வயதாக இருந்த மியன்மார் நாட்டவர் சுயகட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவித்தார்.
ஐந்து மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக ஸின் முதலாளியை மாற்றியிருந்ததால் முகவரிடம் திருப்பியனுப்பப்படுவதாக மூதாட்டி கூறியதும் அப்படியொரு சாத்தியம் இருக்கலாம் என்று நம்பினார்.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி டே யோங் குவாங், நீதிபதி சீ கீ ஊன் ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டை திருத்த அனுமதியளித்தது.
இதற்கான காரணத்தை தலைமை நீதிபதி மேனன் விளக்கினார்.
பணிப்பெண் ஸின் மார் நிவே இளம் வயதுடையவர். சொந்த நாட்டில் கடன்கள் இருந்த சூழ்நிலையில் முகவரிடம் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறியதும் அச்சமடைந்தார் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் தண்டனை பற்றிய வாதங்களுக்கு இரு தரப்பினரும் தயாராவதற்கு ஏதுவாக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

