மறதி நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டியைப் பலமுறை தாக்கிய பணிப்பெண்ணுக்குப் புதன்கிழமை (ஜூன் 4) ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்தும் சில உடற்பாகங்களில் கடித்தும் 39 வயது கியல் துன், அவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது.
மூத்தோருக்கான அணையாடை அணியவேண்டிய தேவையுள்ள அந்த மூதாட்டியின் முகம், கைகளில் வீக்கம் இருந்ததாகவும் அவருடைய விலா எலும்பு முறிந்திருந்ததாகவும் கூறப்பட்டது.
அக்காயங்கள் அனைத்தும் பணிபெண் அவரைத் தாக்கியதால் ஏற்பட்டதா என்பது உறுதிபடுத்த முடியவில்லை என மருத்துவர் தெரிவித்தார்.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த கியல் துன், தான் மன அழுத்தத்தில் இருந்ததால் விரக்தியின் வெளிப்பாடாக அச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறினார்.
தன்மீது சுமத்தப்பட்ட மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த நான்காவது தாக்குதல் குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டது.
குற்றம் நடந்தபோது பாதிக்கப்பட்ட மூதாட்டி தமது 91 வயது கணவருடன் வீடமைப்பு வளர்ச்சி கழகக் குடியிருப்பில் வசித்துவந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு பிற்பகுதியில் பணிப்பெண் கியல் துன்னை அந்த முதிய தம்பதியரைப் பராமரிக்க அவர்களின் 32 வயது பேரன் நியமித்ததாகவும் அவர் வேறு இடத்தில் வசித்துவந்ததாகவும் கூறப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி இரவு 10.22 மணிக்கும் 10.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த மூதாட்டியைப் பலமுறை பணிப்பெண் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மூதாட்டியை மட்டுமின்றி, படுக்கை அறையில் கீழே விழுந்த அந்த மூதாட்டியின் கணவருக்கும் உதவி புரியாமல் கியல் துன் இருந்ததைக் கண்காணிப்புக் கருவி மூலம் அவர்களின் பேரன் தெரிந்துகொண்டார்.
பணிபெண் குறித்து ஜனவரி 4ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவரைச் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பிப்ரவரி 17ஆம் தேதி கியல் துன் கைதுசெய்யப்பட்டார்.

