வீட்டு இணையத் தொடர்பைப் பயன்படுத்த முடியாத பணிப்பெண்கள்

வீட்டு இணையத் தொடர்பைப் பயன்படுத்த முடியாத பணிப்பெண்கள்

3 mins read
6aa7fcb8-595c-4578-b8af-f24397902f1e
லக்கி பிளாசாவில் உள்ள சிங்டெல் கடையில் சிம் அட்டை இணையத் தொடர்புக்கு கட்டணம் செலுத்துவதற்காகக் காத்திருந்த பணிப்பெண்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகிலேயே அதிகமானோர் இணையத் தொடர்புகளைப் பயன்படுத்தும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அதாவது கம்பியில்லா அகண்ட அலைவரிசை இணையப் பயன்பாடு ஏறக்குறைய 180 விழுக்காடாக இருக்கிறது. தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் இதனைக் காட்டுகின்றன.

அது மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் சுமார் 10.8 மில்லியன் கம்பியில்லா இணையத் தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர். இது, சிங்கப்பூரில் குடியிருப்பவர்களைவிட அதிகம்.

ஆனால் இங்குள்ள 300,000 பணிப்பெண்களைப் பொறுத்தவரை நிலைமை வேறு விதமாக இருக்கிறது.

பிலிப்பீன்சிலிருந்து இங்கு வந்து பணிப்பெண்ணாக இருக்கும் 48 வயது ஜேனுக்கு (புனைப்பெயர்) வீட்டுக் கம்பியில்லா இணையத் தொடர்பைப் பயன்படுத்த அனுமதியில்லை. ஒரே குடும்பத்துக்காக அவர், 13 ஆண்டுகள் பணியாற்றினாலும் வீட்டு இணையத் தொடர்பை அவரால் பயன்படுத்த முடியாது.

“சில சமயங்களில் முதலாளிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். இணையத்தைப் பயன்படுத்தினால் பணிப்பெண்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று முதலாளிகள் நினைக்கின்றனர்,” என்று ஜேன் கூறுகிறார்.

எம்1 நிறுவனத்தின் சிம் அட்டை திட்டத்துக்கு மாதம் 10 வெள்ளி செலுத்தி அவர் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறார்.

இணையப் பயன்பாட்டை குடும்பத்தினர் அணுக்கமாகக் கண்காணிப்பதாகவும் அவர் நம்புகிறார். பகல் நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவரது முதலாளி வீட்டைச் சுற்றி கண்காணிப்புக் கேமராக்களை வைத்துள்ளார்.

இதன் காரணமாக பகல் நேரத்தில் கழிவறை போன்ற மறைவான இடத்தில் மட்டுமே ஜேன் கைப்பேசியைப் பயன்படுத்த முடியும்.

அவரது தோழியான 42 வயது ஜூடித், (உண்மைப் பெயரல்ல) ஒரே வீட்டில் 22 ஆண்டுகள் வேலை செய்தாலும் பகல் நேரத்தில் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு வரவேற்பு அறை மேசைமீது தமது கைப்பேசியை வைத்துவிட வேண்டும் என்பது வீட்டின் வழக்கமான விதிமுறை என்று கூறுகிறார்.

வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கைப்பேசியை எடுக்கும்போது சில சமயங்களில் இரவு 10.00 மணியாகிவிடும். குடும்பத்தினருடன் பேச அவருக்கு போதுமான நேரமிருக்காது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த 38 வயது பணிப்பெண்ணான சிட்டி கோலிஃபட்டுன் போன்ற சிலர், கம்பியில்லா இணையத் தொடர்பு அல்லது கைப்பேசிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காத முதலாளிகளும் இருப்பதாகக் கூறுகின்றனர்.

வேலைகளுக்கு கைப்பேசிகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து அவர்கள் செயல்படுகின்றனர்.

“குழந்தைகள் அருகில் இருக்கும்போது நான் என்னுடைய கைப்பேசியைப் பயன்படுத்த மாட்டேன்,” என்கிறார் அவர்.

சிங்கப்பூரில் ஒப்பந்தமில்லாத ‘சிம் ஒன்லி’ திட்டம் தாராளமாக இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதற்கான கட்டணமும் 2017க்கும் 2025க்கும் இடையே ஒரு கிகாவாட்டுக்கு 20 வெள்ளியிலிருந்து சரிந்துள்ளது.

‘ஹோம்’ துணை இயக்குநரான பிரசாந்த் சோமசுந்தரம், கடந்த மூன்று ஆண்டுகளில் லாப நோக்கற்ற தங்குமிடங்களில் தங்கியிருந்த வீட்டுப் பணிப்பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் முதலாளிகள் கைப்பேசிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததாகத் தெரிவித்தனர் என்றார்.

பணிப்பெண்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்வது அல்லது வேலை முடிந்த பிறகு நள்ளிரவில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற கட்டுப்பாடுகள் சில வீடுகளில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

“வீட்டுப் பணிப்பெண்களுக்கென தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலை நேரம் இல்லாததால் அவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது,” என்ற அவர், அத்தகைய அணுகுமுறை அவர்களின் நல்வாழ்விற்கும் தேவைப்படும்போது ஆதரவைத் தேடுவதற்கும் உதவும் என்கிறார்.

குறிப்புச் சொற்கள்