அணிவகுப்பை அலங்கரித்த மாற்றுத்திறனாளிகளின் கம்பீர நடை

அணிவகுப்பை அலங்கரித்த மாற்றுத்திறனாளிகளின் கம்பீர நடை

2 mins read
bbc5b150-d140-49af-b0a9-0ba23d7a3613
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் மாற்றுத்திறனாளிகள் அணி முதன்முறையாகப் பங்கேற்றனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மன்றத்தைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். 

சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், வழிகாட்டி நாய்களுடன் அணிவகுப்பில் பங்கேற்ற அவர்கள், அரங்கில் திரண்டிருந்த மக்களின் பலத்த கரவொலியைப் பெற்றனர்.

முன்னாள் பாராவிளையாட்டு வீராங்கனை யாப் சியான் யின்னின் தலைமையில் அக்குழுவினர் மேடைக்கு வந்தனர். 

பார்வையற்றவரான லிம் லீ லீ, தமது ‘ஹெஸ்டா’ என்ற வழிகாட்டி நாயுடன் அதில் கலந்துகொண்டார்.

இம்முறை 1,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பங்கேற்பாகும். 

என்டியுசி, கிராப் மாணவர் அமைப்புகள் சேர்ந்த அணிகளும் அதில் பங்கேற்றன.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, பொதுமக்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் குடைகளை விரித்து ‘எஸ்ஜி கோ பியாண்ட்’ என ‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்’ என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை உருவாக்கிக் காட்டினர்.

சிங்கப்பூர் சட்டத்துறையின் 200 ஆண்டுகளைக் குறிக்கும் அலங்கார ஊர்தி, லெங்கோக் பாருவின் ரோந்துச் சிறுவர்கள், சுவரோவியக் கலைஞர் யிப் யூ சோங் ஆகியோரின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் ஊர்திகள் உட்பட 18 அலங்கார ஊர்திகள் வலம் வந்தன.

“நாம் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருந்தாலும், வெவ்வேறு திறன்களைக் கொண்டிருந்தாலும், சிங்கப்பூரர்களாகிய நம் அனைவருக்கும் நாட்டின்மீது ஒரே அளவிலான அன்பும் பற்றும் உள்ளது,” என்றார் 45 வயது கர்னல் லாவ் கை ஹெங் ஆண்டனி.

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் பணியாற்றி வரும் இவர், இவ்வாண்டு அணிவகுப்பு மற்றும் சடங்குமுறைக் குழுத் தலைவராக இருந்து தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான திட்டமிடல் பணிகளில் உதவி செய்தார்.

‘தொடுவானம் நோக்கி, முன்னேறட்டும் சிங்கப்பூர்’ என்பது இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள். அனைத்துச் சிங்கப்பூரர்களின் முன்னேற்றத்தை நோக்கிய உறுதியையும் ஒருவரையொருவர் ஆதரித்து அக்கறையுடன் வாழும் மனப்பான்மையையும் கொண்ட இக்கருப்பொருளை ஆழமாக பிரதிபலித்தது உடற்குறையுள்ளோர் அணி.

தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் அணி இடம்பிடித்தது.
தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகள் அணி இடம்பிடித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தேசிய தினம் 2026மாற்றுத்திறனாளிNDP 2026

தொடர்புடைய செய்திகள்