ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) செய்ய இருக்கும் பில்லியன் டாலர் முதலீட்டு விவகாரத்தை தமது இயக்குநரவை முழுமையாகக் கையாண்டு வருவதாக நிறுவனத்தின் பங்குதார்களிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைவர் பீட்டர் சீ தெரிவித்துள்ளார்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 54வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
அந்த ஒன்றரை மணி நேர நிகழ்வில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்வகளுக்கு திரு சீ பதிலளித்தார்.
ஏர் இந்தியாவில் செய்யப்பட இருக்கும் முதலீட்டு விவகாரம் இயக்குநரவையின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றார் அவர்.
ஏர் இந்தியாவின் முதலீட்டாளரான டாடா சன்ஸ் உடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்சில் செய்யப்பட இருக்கும் முதலீடு குறித்து இயக்குநரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் விவாதித்து வருகிறோம் என்றும் அந்தக் கூட்டு முயற்சியை இயக்குநர்கள் தொடர்ந்து பரிசீலிப்பார்கள் என்றும் திரு சீ தமது பதிலில் குறிப்பிட்டார்.
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன்னும் எவ்வளவு முதலீடு செய்யும் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், வருங்காலங்களில் அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.
திரு சீயும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங்கும் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையின் ஆற்றலைப் பாராட்டினர்.
இருப்பினும், எந்தவொரு முதலீட்டு முடிவுகளும் வலுவான வணிகத் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அது நிறுவனத்தின் சக்திக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் திரு கோ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்குதாரர்களிடம் உறுதியளித்தார்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தையில் நேரடியாகப் பங்கு வைத்துள்ள ஒரே வெளிநாட்டு விமான நிறுவனம் எஸ்ஐஏதான்.
ஏர் இந்தியாவின் 74.9 விழுக்காட்டுப் பங்கை டாடா குழுமமும் எஞ்சிய 25.1 விழுக்காட்டுப் பங்கை சிங்கப்பூர் ஏர்லைன்சும் வைத்துள்ளன.

