குறுந்தகவலில் பெரிய மோசடி ஒளிந்திருக்கக்கூடும்: மெட்டா எச்சரிக்கை

குறுந்தகவலில் பெரிய மோசடி ஒளிந்திருக்கக்கூடும்: மெட்டா எச்சரிக்கை

1 of 2
படம்: மெட்டா
படம்: மெட்டா

23 Sep 2026 - 6:15 pm

3 mins read

ஃபேஸ்புக்கில் ஓர் அழகான குழந்தை, கண் கலங்கவைக்கும் கோயில் படம், ஒரு பிரபலத்தின் படம் - பார்த்ததும் விருப்பம் தெரிவிக்கிறோம் அல்லவா? அதுதான் மோசடிக்காரர்கள் விரிக்கும் முதல் வலை. 

மெட்டா அண்மையில் வெளியிட்ட மோசடி குறித்த இரண்டாம் அரையாண்டிற்கான ‘எச்2 அச்சுறுத்தல் அறிக்கை’யின்படி மோசடிக்காரர்கள் இப்போது போலிப் படங்களை அதிகம் உருவாக்கி வலை விரிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா கண்டுபிடித்த மிகப்பெரிய மோசடி இதுதான். 500,000க்கும் மேற்பட்ட போலிக் கணக்குகள். அவை அத்தனையும் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய படங்களை வைத்து உருவாக்கப்பட்டவை.  சமயப் படங்கள், பிரபலங்களின் படங்களைப் பெரிய பொதுக்குழுக்களில் பகிர்ந்து, இணையப்பக்கதில் உலாவர விடுவார்கள். பிறகு மக்களைக் கருத்து எழுத வைப்பார்கள். கருத்து எழுதிய சில நிமிடத்தில் ஒரு தனிச் செய்தி வரும். அதாவது, ‘வாழ்த்துகள், நீங்கள் பரிசு வென்றுவிட்டீர்கள்’ என்று.

செயற்கைப் படத்தை வைத்துச் சிக்க வைக்கும் புதுத் தந்திரம்

இரண்டாவது வலை, வயதானவர்களைக் குறிவைத்து விரிக்கப்படுவது. அமெரிக்காவில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசாங்க மருத்துவ உதவி கிடைக்கும், வீட்டைச் சீர்செய்ய மானியம் கிடைக்கும் என்று விளம்பரத்துடன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் இயங்கியுள்ளன.

அந்த இணையப்பக்கத்தை நம்பி அதற்குள்ளே போனவர்களின் தகவல்களைத் திருடி, போலி இணையத்தளங்களுக்கு அழைத்துச் சென்று பணம் பறித்துள்ளனர் மோசடிக்காரர்கள்.

இது வங்கிகள் கொடுத்த தகவலால்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அதே போல், வெளிநாட்டில் வாழும் ஆப்பிரிக்க மக்களைக் குறிவைத்துப் போலி முதலீட்டுத் திட்டம், போலிப் பணம் அனுப்பும் சேவை, சாமியார் போல் நடித்து நன்கொடை என இரண்டாயிரம் கணக்குகள் மூலம் இன்னொரு கும்பல் ஏமாற்றியுள்ளது.

இந்த மோசடி நிலையங்கள் எல்லாம் மியன்மார், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் காட்டுப் பகுதிகளில், வேலை என்று சொல்லி இளையரைக் கடத்திவந்து, அடைத்துவைத்து, மிரட்டி மோசடி செய்ய வைக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இதை முடிவுக்குக் கொண்டுவர மெட்டா, அமெரிக்க நீதித்துறை, தாய்லாந்துக் காவல்துறை எல்லாம் சேர்ந்து மேற்கொண்ட கடும் நடவடிக்கையால், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட கணக்குகள், இணையப் பக்கங்கள், குழுக்கள் எல்லாம் ஒரே அடியில் நீக்கப்பட்டுள்ளன. 

தாய்லாந்தில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிலையங்களுக்கு இணையம் கொடுத்த ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் தொடர்புக் கருவிகள் பிடுங்கப்பட்டன. அவர்கள் பணம் வைத்திருந்த ‘காயின்பேஸ்’ கணக்கில் மூன்று மில்லியன் டாலருக்கும் மேல் முடக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் இருபதாயிரம் கணக்குகளை நிறுத்தியது. 

மெட்டா அண்மையில் வெளியிட்ட மோசடி குறித்த ‘எச்2 அச்சுறுத்தல் அறிக்கை’யின்படி மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெருமளவில் போலிப் படங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.  இணையப்பக்கங்களில் நன்கொடை கேட்டும் பணம்பறிக்கிறார்கள் மோசடிக்காரர்கள்.
மெட்டா அண்மையில் வெளியிட்ட மோசடி குறித்த ‘எச்2 அச்சுறுத்தல் அறிக்கை’யின்படி மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெருமளவில் போலிப் படங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இணையப்பக்கங்களில் நன்கொடை கேட்டும் பணம்பறிக்கிறார்கள் மோசடிக்காரர்கள். - படம்: மெட்டா

புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து கானா, நைஜீரியாவில் இருந்து இயங்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தானில் எதிர்கால மோசடி நடவடிக்கைகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,75,000க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகளை மெட்டா கண்டறிந்து முடக்கியுள்ளது.   

’ஏஐ’ பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் புதிய உத்திகளைக் கையாண்டாலும் அதே தொழில்நுட்பத்தைக் கொண்டே அவர்களைத் தடுக்கும் அரண்களையும் மெட்டா பலப்படுத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது. 

மோசடிகளைக் கண்டறிய மித்தோஸ் நிறுவனம், ‘சாகோ’ என்ற இலவசச் செயற்கை நுண்ணறிவு உரையாடல் கருவியை உருவாக்கியுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் போதைப்பொருள் குற்றத் தடுப்பு அலுவலகம், அனைத்துலக நீதி இயக்கம், அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, அதன் பயன்பாட்டை ஆதரிப்பதாக மெட்டா கூறியுள்ளது. இது பயனர்கள் மோசடியில் சிக்கும் முன்பே அதை அடையாளம் காண உதவுகிறது.

மெட்டா சொல்வது ஒன்றுதான்.

‘‘இனி மோசடிக்காரர்கள் ஒரு ஆள் இல்லை, ஒரு தொழிற்சாலை போல வேலை செய்கிறார்கள். இதை தனி ஆளாக தடுக்க முடியாது, எல்லோரும் சேர்ந்தால்தான் இந்தக் கட்டமைப்பை அறுத்து மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்,’’ என்கிறது மெட்டா.  

குறிப்புச் சொற்கள்