2025ல் வீடு வாங்கிய பெரும்பாலானோர் கைக்காசு செலுத்தவில்லை: ஆய்வு

மில்லியன் வெள்ளி வீவக மறுவிற்பனை வீடுகள்

2025ல் வீடு வாங்கிய பெரும்பாலானோர் கைக்காசு செலுத்தவில்லை: ஆய்வு

2 mins read
7b62ec1b-b6f1-45b5-94c3-d862b601b4aa
2026 ஜூலை 2ஆம் தேதி, மவுண்ட் ஃபேபரிலிருந்து எடுக்கப்பட்ட படத்தில், வீவக புளோக்குகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2025ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் மதிப்புடைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்கியவர்களில் பெரும்பாலானோர், மதிப்பீட்டுத் தொகைக்குமேல் கைக்காசு (சிஓவி) எதுவும் செலுத்தவில்லை என்று புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சந்தை மதிப்புக்கு ஏற்பவே அத்தகைய வீடுகளின் விலைகள் அமையப் பெற்றுள்ளன என்பதை ஆய்வின் தரவுகள் காட்டுகின்றன.

வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெளியான இந்த ஆய்வறிக்கையின்படி, மில்லியன் வெள்ளி வீடு வாங்கியவர்களில் 69.1 விழுக்காட்டினர் கைக்காசு செலுத்தவில்லை. ஏறக்குறைய 11.8 விழுக்காட்டினர் $40,000க்குக் குறைவாகவும் 6.4 விழுக்காட்டினர் $40,000 முதல் $80,000 வரையிலும் கைக்காசு செலுத்தினர். ஏறத்தாழ 5.5 விழுக்காட்டினர் $100,000க்குமேல் கைக்காசு செலுத்தினர்.

தோ பாயோ, புக்கிட் மேரா, காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், கிளமெண்டி போன்ற முக்கிய வட்டாரங்களில் $1 மில்லியன் முதல் $1.7 மில்லியன் வரையிலான 110 வீட்டுப் பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மில்லியன் வெள்ளி வீடு வாங்கியோரில் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் 71 விழுக்காடு பங்கு வகித்தனர். 60 வயதை எட்டியோரில் 71 விழுக்காட்டினர், தங்களின் தனியார் வீடுகளை விற்றுவிட்டு, தங்களின் ஓய்வூதியத் தேவைகளுக்காகவும் சொத்து உரிமையைக் குறைத்துக்கொள்ளவும் மில்லியன் வெள்ளி வீவக வீடுகளுக்கு மாறினர்.

அதேவேளையில், 40-49 வயதுப் பிரிவினரில் 46 விழுக்காட்டினர் சிறிய வீவக வீடுகளிலிருந்து பெரிய வீடுகளுக்கு மாறினர். 30-39 வயதுப் பிரிவினரில் 40.5 விழுக்காட்டினர் தங்களின் முதல் இல்லமாக அதனைத் தேர்ந்தெடுத்தனர். நடுத்தர, உயர் பதவிகளில் இருக்கும் அந்த இளவயதினரின் வருமான உயர்வும் மத்திய சேம நிதிச் சேமிப்புமே மில்லியன் வெள்ளி வீடுகளை வாங்க முடிவதற்கு முக்கியக் காரணம்.

2026 ஜனவரி முதல் ஜூலை 16 வரை, மில்லியன் வெள்ளி மதிப்பில் 1,002 வீடுகள் மறுவிற்பனையாகின. இது, 2025ன் ஒட்டுமொத்த சாதனையான 1,593 வீடுகள் என்ற எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு அதிகரிக்கக்கூடும் என புரோப்நெக்ஸ் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்