மாஜு வனப்பகுதி, கில்மன் பேரெக்ஸ் ஆகியவற்றுக்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்ட வேறு பகுதிகள், வீடுகளுக்காகவும் பிற தேசியத் தேவைகளுக்காவும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டதாகத் தேசிய வளர்ச்சி துணையமைச்சர் அல்வின் டான் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட வேறு சில பகுதிகளைத் தற்போதைக்கு மறுமேம்பாடு செய்ய முடியாது என்றார் அவர்.
எனவேதான், அடுத்த பத்தாண்டுகளுக்கான சிங்கப்பூரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கில்மன், சன்செட் வே, மாஜு வனப்பகுதி ஆகியவை மேம்படுத்தப்படவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாஜு வனப்பகுதி, கில்மன் பேரெக்ஸ் ஆகியவற்றுக்கான திட்டங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டது. அது தொடர்பில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
வீட்டுத் தேவைகளைச் சமாளிப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கருத்தில்கொள்வது, வீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுப்பினர்கள் எழுப்பிய சில கேள்விகள்.
கில்மன் பேரெக்ஸ், சன்செட் வே ஆகியவற்றுக்கான திட்டங்கள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்று டான விளக்கம் அளித்தார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதியுடன் நிறைவடையும் நான்கு வார அதிகாரபூர்வ பொது கலந்தாலோசனைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தரப்புடன் அரசாங்கம் கூடுதல் கலந்துரையாடல்களை நடத்தும் என்றார் அவர்.
ஆய்வுகளின் முடிவுகளையும் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துகளையும் நன்கு ஆராய்ந்த பிறகே மேம்பாட்டுத் திட்டங்கள் உறுதிப்படுத்தப்படும் என்றார் டான்.
“மேம்பாட்டுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வது, எந்தளவுக்குப் பசுமையான பகுதியையும் மரபுடைமையையும் பாதுகாப்பது போன்றவை அவற்றுள் அடங்கும்,” என்றும் வெளியுறவுத் துணையமைச்சர் டான் குறிப்பிட்டார்.
இருப்பினும், இரண்டு பகுதிகளிலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று திரு டான் தெளிவுபடுத்தினார்.
காலியான அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத இடங்களில் வீடுகளைக் கட்டும்படி குடியிருப்பாளர்கள் முன்வைத்த பரிந்துரைகளையும் டான் சுட்டிக்காட்டிப் பேசினார்.
டோவரில் உள்ள முன்னாள் தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகம் இருந்த பகுதி அவற்றுள் ஒன்று. அங்கு, அடுத்த சில ஆண்டுகளில் பொது வீடுகளும் தனியார் வீடுகளும் உருவாக்கப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, மாஜு முகாம் தேசியத் தற்காப்புக்குத் தேவைகளுக்குத் தேவைப்படுகிறது என்ற டான், தற்போதைக்கு அங்கு வீடுகளைக் கட்ட இயலாது என்றார்.


