அன்றாடம் நம் கண்களில் படும் எளிய கூறுகளை ஆடை வடிவமைப்பில் புகுத்தி வருகிறார் ஆடை வடிவமைப்பாளர் பொன்னி அஷோக்.
சென்னையைச் சேர்ந்த பொன்னி, தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போதெல்லாம் லாரிகளின் பின்புறத்தைப் படமெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
லாரிகளின் மஞ்சள், வெள்ளை, நீல நிறங்கள், அதில் வரையப்படும் சிறு சிறு வடிவங்கள் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்டு, ‘ஒடிஸி’ (ODYSSEY) எனும் வகை ஆடையை வடிவமைத்துள்ளார்.
தந்தை குழந்தைநல மருத்துவர், தாய் மகப்பேறு மருத்துவராக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே கலை வடிவமைப்புகள் மீதிருந்த ஈர்ப்பால், வடிவமைப்பாளராக வேண்டும் என தனது பள்ளிப்பருவ காலத்திலேயே பொன்னி முடிவெடுத்தார்.
சென்னையில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், பன்முகத்தன்மை கொண்ட சமூகமான சிங்கப்பூரில் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் பொருட்டு, லாசால் கலைக் கல்லூரியில் ‘ஃபேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ்’ துறையில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளார்.
இவ்வாண்டு முதலாம் வகுப்பு ‘ஹானர்ஸ்’ பட்டம் பெற்றுள்ள இவர், பெரிய வடிவமைப்பு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெற விரும்புகிறார்.
உயர்கல்வி கற்று, ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அன்றாட வாழ்வியல், இந்தியக் கலாசாரக் கூறுகளை ஆடை வடிவமைப்பு மூலம் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனும் கனவை நோக்கிப் பயணிக்க உள்ளதாக பொன்னி சொன்னார்.
நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், தனது படைப்புகளில் இயன்றவரை அதனை உறுதிசெய்ய விரும்புகிறார்.
தொடர்புடைய செய்திகள்
லசால் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா
இவ்வாண்டின் லாசால் கலைக் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்றது.
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இவ்விழாவில், பட்டயக்கல்வி மாணவர்கள் பட்டயமும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் பட்டமும் என மொத்தம் 832 பேர் கல்விச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
கல்வியில் சிறந்து விளங்கிய 16 மாணவர்களுக்கு லசால் உன்னத விருதுகளும் (LASALLE Award for Academic Excellence) வழங்கப்பட்டன.
பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டிய நிதி இரண்டாம் அமைச்சருமான சீ, தனித்துவப் படைப்பாற்றல், ஆக்கபூர்வச் சிந்தனையாளர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது என்றார்.
லசால் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு, சிங்கப்பூரில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கண்டு மகிழ்வதாக அவர் சொன்னார்.
மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதுடன், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொள்வது அவர்களைப் பெரும் உயரத்துக்கு இட்டுச்செல்லும் என்றார் அமைச்சர்.

