மேம்பட்ட பொறுப்புகளுடன் மீண்டும் திறக்கப்படும் மலாய் மரபுடைமை நிலையம்

மேம்பட்ட பொறுப்புகளுடன் மீண்டும் திறக்கப்படும் மலாய் மரபுடைமை நிலையம்

2 mins read
9732151c-b286-41f4-bbbb-94c97e496088
மரபுடைமை நிலையம் அமைந்துள்ள கம்போங் கிளாம் வட்டாரத்தின் துடிப்பை மேம்படுத்தும் வகையில், பங்காளிகளுடன் இணைந்து பண்பாட்டு நிகழ்ச்சிகளை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலாய் மரபுடைமை நிலையம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி பொதுமக்களுக்காகத் தனது கதவுகளை மீண்டும் திறக்கவுள்ளது.

சிங்கப்பூரில் மலாய்ப் பண்பாட்டுக்கான மையமாகத் திகழும் வகையிலான பரந்த உருமாற்றத்தின் தொடக்கமாக இந்தத் திறப்பு அமைவதாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) தெரிவிக்கப்பட்டது.

வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், மலாய்ச் சமூத்தின் கலாசார, மரபுச் செழுமையைக் கொண்டாட அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான கடப்பாட்டில் மலாய் மரபுடைமை நிலையத்திற்கான மேம்பாடுகள் இடம்பெறுவதாகக் கூறினார்.

“சிங்கப்பூர் மலாய்ச் சமூகத்திற்கென்ற பாரம்பரியமும் மரபும் சமூக உணர்வும் எங்களுக்குத் தனித்துவமான ‘சிங்கப்பூர் மலாய்’ என்ற அடையாளத்தைத் தந்துள்ளன,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மரபுடைமை நிலையம் அமைந்துள்ள கம்போங் கிளாம் வட்டாரத்தின் துடிப்பை மேம்படுத்தும் வகையில், அந்நிலையம் பங்காளிகளுடன் இணைந்து பண்பாட்டு நிகழ்ச்சிகளை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிகழ்ச்சிகளில் முதன்மையாக உள்ள நிலையத்தின் மறுதிறப்பு விழா, வரும் ஏப்ரல் 25 முதல் மே 3 வரை நடைபெறும். அத்துடன், கூடுதலாக மூன்று வருடாந்தர நிகழ்ச்சிகளையும் மலாய் மரபுடைமை நிலையம் நடத்தவுள்ளது. அவற்றில் வெளிப்புறத் திரைப்பட நிகழ்ச்சிகள், இளையர் விழாக்கள், மரபுடைமை வர்த்தகக் கண்காட்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.

அத்துடன், சிங்கப்பூர் மலாய்ப் பண்பாடு மற்றும் மரபுக்கான களஞ்சியத்தை உருவாக்க புதிதாக ஆய்வுப் பிரிவு ஒன்றையும் அந்நிலையம் அமைக்கவுள்ளது. கண்காட்சிகள், பதிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குத் தேவைப்படும் தகவல் மூலங்களை இந்தப் பிரிவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொட்டுணர முடியாத மரபு வழிகாட்டல் திட்டம் ஒன்றும் தொடங்கப்படும் எனப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார். அனுபவமிக்கப் பயிற்சியாளர்களை இளைய ஆர்வலர்களுடன் இணைக்கும் 10 வாரங்களைக் கொண்ட முறையான பண்பாட்டு மரபு வழிகாட்டல் திட்டமாக அது இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்