மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்ட மலாய் மரபுடைமை நிலையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் எனப் பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி நிலையம் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டது.
சிங்கப்பூர் மலாய்ப் பண்பாட்டின் செழுமையையும் துடிப்பையும் பறைசாற்றும் வகையில் புதிய கலைக்கூடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை நிலையத்தில் இடம்பெறும் என்று தமது தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் கூறினார்.
இந்தப் புதுப்பிப்புப் பணி சிங்கப்பூரில் இருக்கும் மலாய்ச் சமூகத் துணைக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பண்பாடு, எழுத்துமுறைகள் போன்ற பல்வேறு வழிகளில் மேம்படுத்தும்.
மலாய் மரபுடைமையை ஒரு வளமான பன்முகத்தன்மையுடன் பார்வையாளர்கள் காண அது ஊக்குவிக்கும்.
கல்வி, இலக்கியம், கலைகள் ஆகிய துறைகளில் மலாய்ப் பெண்களின் பங்களிப்புகளைச் சிறப்பிக்கும் வகையில், அவர்கள் தொடர்புடைய கதைகளும் அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்படும்.
அத்துடன், உள்ளூரில் வளர்ந்துவரும் மலாய்க் கலைஞர்களின் படைப்புகளையும் புதுப்பிக்கப்பட்ட மலாய் மரபுடைமை நிலையத்தில் காணலாம்.
சிங்கப்பூர் மலாய்ச் சமூகத்தை மேம்படுத்துவது என்பது அவர்கள் மரபுடைமை நிலையத்தை மறுசீரமைப்பதோடு மட்டுமன்றி, கம்போங் கிளாம் வட்டாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் உள்ளதாகவும் பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.