மலாய்/முஸ்லிம் சமூகத்தில் வெற்றி என்பது ஒரே ஒரு கல்விப் பாதைக்குள் அடங்கிவிடவில்லை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.
சுயஉதவிக் குழுவான மெண்டாக்கி அந்த ஆய்வை நடத்தியது. கல்வியில் பெற்றோரின் உந்துதல்கள் குறித்து ஆய்வு கவனம் செலுத்தியது.
மலாய் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெற்றோர், பல்கலைக்கழகக் கல்வியைக் காட்டிலும் நிதி நிலைத்தன்மை, அர்த்தமுள்ள வாழ்க்கைத்தொழில், வாழ்நாள் கற்றல் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை ஆய்வு காட்டியது.
ஆய்வில் ஐந்து வகையான பெற்றோர் கண்டறியப்பட்டனர். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரிவைச் சேர்ந்த 41 விழுக்காட்டினர், பிள்ளைகள் பட்டக்கல்வியைப் பெறவேண்டும் என்று விரும்பினர். இந்தப் பெற்றோர் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதோடு குடும்பத்தின்மீது மிகுந்த பொறுப்புணர்வையும் கொண்டிருந்தனர்.
மெண்டாக்கி அமைப்பின் 10வது ‘ரைக்கான் இல்மு’ இயக்கத்தின்போது ஆய்வின் முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டன. இயக்கம், வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கிறது. நிகழ்ச்சி சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) நடைபெற்றது.
ஆய்வு, இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30ஆம் தேதிவரை நடத்தப்பட்டது. அதில் 1,010 மலாய்/முஸ்லிம் பெற்றோர் பங்கெடுத்தனர். அவர்களில் 28 விழுக்காட்டினர் பல்கலைக்கழகக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் குறைந்தபட்ச இலக்காக நிர்ணயித்திருப்பது தெரியவந்தது.
பல்கலைக்கழகக் கல்வி மட்டுமே வெற்றிக்கான ஒரே அளவுகோல் அன்று என மெண்டாக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெரோஸ் அக்பர் கூறினார்.
“பெற்றோர் இருவரும் பிள்ளைக்குச் சிறந்ததை விரும்பலாம். ஆனால் அதை அடைவதற்கான வழிகள் குறித்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்,’’ என்றார் அவர்.
“வெற்றி என்பது அர்த்தமுள்ள வாழ்க்கைத்தொழிலைக் கொண்டிருப்பது, நிதி நிலைத்தன்மையை அடைவது அல்லது மகிழ்ச்சியான, நிறைவான குடும்பத்தை உருவாக்குவது ஆகியவற்றையும் குறிக்கலாம்,” என்று திரு ஃபெரோஸ் அக்பர் சொன்னார்.

