மலேசியாவில் ஆறு மாதங்களில் 35,000 பேர் வேலை இழந்தனர்

2 mins read
7c9935dc-2304-41ac-b526-7f627ca70616
மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம். - கோப்புப் படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை ஏறக்குறைய 35,446 பேர் தங்களுடைய வேலைகளை இழந்தனர்.

நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் அவர்கள் வேலை இழந்ததாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மை மேற்கோள்காட்டி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

சமூகப் பாதுகாப்பு அமைப்பிலிருந்து (பெர்கேசோ) திரட்டப்பட்ட தகவலிலிருந்து 35,000க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தது தெரியவந்துள்ளது.

“இருப்பினும் அதே காலகட்டத்தில் புதிய வேலை தேடியவர்கள், வேலை இழந்தவர்கள் உள்ளிட்ட 94,262 பேருக்கு பெர்கேசோ வெற்றிகரமாக வேலைகளைப் பெற உதவியிருக்கிறது,” என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

செரியான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரிச்சர்ட் ரையாட் ஜேயம் கேட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதில் கூறினார்.

மலேசியாவில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடல் காரணமாக வேலை வாய்ப்புக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ரிச்சர்ட் ரையாட் வினவினார்.

ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிந்தவுடன், பெர்கேசோ மூலம் தனது அமைச்சு ஆரம்பத்திலேயே தலையிட்டு வேலை வாய்ப்புக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதாக திரு சிம் குறிப்பிட்டார்.

“இந்தத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்றார் அவர்.

‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’, பெர்கேசோ வேலை இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் அடங்கும்.

தற்போதைய ஊழியர் சந்தைக்கு ஏற்ப திறன்களைப் பெறவும் மறுபயிற்சி பெறவும் பெர்கேசோ உதவுகிறது.

அதே காலகட்டத்தில் மொத்தம் 5,403 காப்புறுதி பெற்ற தனிப்பட்டவர்கள் அத்தகைய திட்டங்களில் திறன்களை மேம்படுத்திக் கொண்டனர் அல்லது மறுபயிற்சி பெற்றனர்.

வேலை வாய்ப்பு காப்பீட்டுச் சட்டத்தின்கீழ் கூடுதலாக, பெர்கேசோ நிதியுதவி அல்லது இழப்பீட்டை வழங்கியதாகவும் அமைச்சர் ஸ்டீவன் சிம் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்