தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் தடுத்துவைப்பு

2 mins read
02462aa5-e26c-4977-9e54-340cd545ed99
பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே 55 கி.மீ. தொலைவில் உள்ள நீர்ப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘ஹாஃப்னியா நையில்’ கப்பலுடன் பெரிய எண்ணெய்க் கப்பல் ஒன்று மோதியது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே ஏறத்தாழ 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர்ப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘ஹாஃப்னியா நையில்’ கப்பலுடன் மோதிய பெரிய எண்ணெய்க் கப்பலை மலேசியக் கடலோரக் காவல்படை ஞாயிற்றுக்கிழமை வழிமறித்தது.

தீயை ஏற்படுத்தி, குறைந்தது இரு கப்பல் ஊழியர்களுக்குக் காயம் விளைவித்த விபத்து நிகழ்விடத்திலிருந்து சாவ் தொமே, பிரின்சிப்பே நாட்டுக் கொடியேந்திய ‘செரெஸ் I’ கப்பல் கிளம்பிவிட்டதாக கடலோரக் காவல்படை சனிக்கிழமை கூறியிருந்தது.

இருப்பிடத்தைக் கண்காணிக்கும் முறையை அக்கப்பல் அணைத்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

மலேசிய நீர்ப்பகுதியில் இரு இழுவைப் படகுகள் இழுத்துச்செல்லும் நிலையில் அக்கப்பல் கண்டறியப்பட்டதாக கடலோரக் காவல்படை ஞாயிற்றுக்கிழமை கூறியது.

அந்த எண்ணெய்க் கப்பலும் இரு இழுவைப் படகுகளும் கூடுதல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சொன்னது.

இதற்கிடையே, தான் நடத்திய வான்வழி ஆய்வில், விபத்து நிகழ்ந்த இடத்தில் லேசான எண்ணெய்ப் படலங்கள் கண்டறியப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்தது.

“இதுகுறித்து சுற்றுசூழல் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அது கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ளும்,” என்று கடலோரக் காவல்படை சொன்னது.

‘ஹாஃப்னியா நையில்’ கப்பல், ஸ்பெயினின் ஹுயெல்வா நகரிலிருந்து நஃப்தா (naphtha) எனும் பெட்ரோலிய வேதிப்பொருளை ஏந்திச் சென்றதாக ஸ்பானிய எண்ணெய், எரிவாயு நிறுவனமான செப்சா கூறியது.

“ஹாஃப்னியாவின் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து செப்சா நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. கப்பல் உரிமையாளருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் நல்கி வருகிறோம்,” என்றார் செப்சா பேச்சாளர்.

குறிப்புச் சொற்கள்