ஜோகூர் சோதனைச்சாவடியில் கூடுதல் தானியக்க நுழைவாயில்கள்

2 mins read
1039a8ba-69f3-4c40-bb4a-7da0d299afda
உடனடி, மத்திம கால மேம்பாடுகள் சோதனைச்சாவடி நுழை வாயிலின் உள்கட்டமைப்பையும் தானிக்க முறையையும் தொடர்ந்து மேம்படுத்தும் என்று மலேசியா தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் சோதனைச் சாவடியில் கூடுதலாக 40 தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு (NIISe) தானியக்க நுழைவாயில்களையும் 145 கியூஆர் குறியீடு (MyNIISe QR Code) வருடிகளையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மலேசிய உள்துறை அமைச்சு நிறுவ உள்ளது.

மோட்டார் சைக்கிள், கார், நடையர்களுக்கான பாதைகளில் இவை நிறுவப்பட உள்ளன.

ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி ஆகிய இடங்களில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் (பிஎஸ்ஐ), சுல்தான் அபுபக்கர் வளாகம் (கேஎஸ்ஏபி) ஆகியவற்றில் உள்ள குடிநுழைவுச் சாவடிகளில் இந்த மேம்பாடு இடம்பெறும் என்று அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தது.

இவை இரு சோதனைச்சாவடிகளிலும் செயலாக்கத் திறனை இரட்டிப்பாக்குவதுடன் மின்னிலக்க குடிநுழைவு முறையை வலுப்படுத்தும். மலேசிய-சிங்கப்பூர் பயனர்களுக்கு, குறிப்பாக உச்ச நேரங்களில் பயணத்தை எளிதாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஆக்கும் என்று அது தெரிவித்தது.

“இந்த நடவடிக்கை அமைப்பு மிகவும் நிலையானதாகவும் அதிகரித்து வரும் பயணிகளைச் சமாளிக்க ஏதுவாகம் இருப்பதை உறுதி செய்கிறது,” என்று அமைச்சு கூறியது.

உச்ச நேரங்களில் கியூஆர் குறியீடு வருடிகளின் பயன்பாடு தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுடன் இணைந்து முக்கியமான இடங்களில் தானியங்கி அமைப்புகளுக்கான இணைய வசதியினை அமைச்சு விரிவுபடுத்துகிறது. MyNIISe, MyBorderPass அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகளைக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் மிகவும் சுமூகமாகவும் எளிதாகவும் செல்ல அனுமதிக்கும்.

மேம்பாடுகளைக் கண்காணிக்க சிறப்பு அமலாக்கக் குழுவை அமைச்சு அமைத்துள்ளது. மலேசிய நாட்டவரையும் மலேசியாவின் அதிகாரபூர்வ மின்னிலக்க குடிநுழைவு கைபேசிச் செயலியான MyNIISe -ஐ பதிவிறக்கம் செய்து தானியக்கப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதன் மூலம், 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஜோகூர் - சிங்கப்பூர் குடிநுழைவு பயண அனுபவத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அமைச்சு எதிர்பார்க்கிறது.

63 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியாவுக்குள் நுழைய கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம். 71 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அதனைப் புறப்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். இது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை நடைபெறும் ஒரு சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (முனையங்கள் 1, 2), பினாங்கு அனைத்துலக விமான நிலையம், கூச்சிங் அனைத்துலக விமான நிலையம், கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையம் ஆகிய ஐந்து அனைத்துலக விமான நிலையங்களுக்கு இச்சோதனை கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்