அணுசக்தி பயன்பாட்டை விரிவாக ஆராயும் மலேசியா

அணுசக்தி பயன்பாட்டை விரிவாக ஆராயும் மலேசியா

2 mins read
c100c905-fba7-44ed-9f78-9854e655d2e1
மலேசியாவின் நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த அணுசக்தியைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதாகத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் கூறினார். - படம்: பெர்னாமா

புத்ரஜெயா: மலேசியாவின் மைபவர் கூட்டுறவு அமைப்பு, நாட்டின் உத்தேச அணுசக்தித் திட்டம் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்கிறது.

கொள்கை மேம்பாடு, சட்டபூர்வ, தரநிலைக் கட்டமைப்புகள், தொழிற்துறை பங்களிப்பு, மனிதவள முதலீடு ஆகியவை அதில் உள்ளடக்கம் என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் நாட்டின் இயற்கை எரிசக்தி உருமாற்றத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் அணுசக்தியைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக திரு ஃபடில்லா கூறினார்.

மாறிவரும் அனைத்துலக எரிசக்திச் சூழலுக்கு இடையே அணுசக்தியின் பயன்பாட்டை மதிப்பிடுவது தற்போது மிக அவசியமாகிறது என்றார் அவர்.

மலேசியாவின் எரிசக்தி உருமாற்ற, நீர் உருமாற்ற அமைச்சின்கீழ் செயல்படும் மைபவர் அமைப்பு, அணுசக்தி திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக அணுசக்தி அமைப்பு பரிந்துரைத்த கட்டங்கட்டமான அணுகுமுறைக்கு ஏற்ப ஆயத்தங்களை மைபவர் அமைப்பு மேற்கொள்ளும்.

உலகளவிலான பதற்றம் குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள நிலவரம், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள தடை ஆகியவை எரிசக்திச் சந்தையையும் விநியோகத் தொடர்களையும் பாதித்துள்ளதாகத் திரு ஃபடில்லா சொன்னார்.

எனவே, அணுசக்தி நிலையான குறைந்த கரிம வெளியேற்ற எரிசக்தியை வழங்க முடியும் என்ற அவர், படிம எரிபொருள்மீது அதிகம் சார்ந்திருப்பதையும் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும் பல்வேறு ஆசியான் நாடுகள் மேற்கொள்வதாக திரு ஃபடில்லா தெரிவித்தார்.

உதாரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள் அணுசக்தித் திறனை 4,800 மெகாவாட்ஸ் அளவிற்கு அதிகரிக்க பிலிப்பீன்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வியட்னாம், அணுசக்தியைத் தேசிய எரிசக்தித் திட்டத்தில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

மலேசியாவின் எதிர்கால அணுசக்தி மேம்பாடுகள் அனைத்தும் கவனமாக மதிப்பிடப்படும் என்று திரு ஃபடில்லா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்