கோலாலம்பூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், திட்டமிடல் கட்டத்திலிருந்து முழு அளவிலான அமலாக்கக் கட்டத்துக்கு மிக விரைவாக நகர்ந்து வருகிறது என்று மலேசியப் பொருளியல் துறைத் துணையமைச்சர் முகம்மது ஷஹார் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த மண்டலம் தெற்கு மலேசியாவி்ல் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது. மலேசியக் கட்டடம், சொத்துச் சந்தை உச்சநிலை மாநாட்டில் முதன்மையுரையாற்றிய துணையமைச்சர் ஷஹார், 2025ஆம் ஆண்டின் இறுதி வரை ஜோகூர் மாநிலத்துக்கு வந்த ஒட்டுமொத்த முதலீடுகளில் 85 விழுக்காடு இந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் மூலமே கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இது முதலீட்டாளர்களின் அதிகரித்துவரும் நம்பிக்கையையும் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான மிக ஆழமான எல்லை தாண்டிய பொருளியல் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கிறது.
ஜோகூரின் முக்கியப் பொருளாதாரப் பகுதிகளை உள்ளடக்கிய இந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலம், அதிநவீன உற்பத்தித் துறை, தளவாடங்கள், மின்னியல் பொருளியல், பசுமை ஆற்றல், சுகாதாரப் பராமரிப்பு, நிதிச் சேவைகள் உள்ளிட்ட உயர் மதிப்புமிக்க தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

