தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையக்கட்டுப்பாட்டை விரிவாக்கும் சட்டத்தை மலேசியா நிறைவேற்றியது

2 mins read
e17a9275-f252-49b5-ac03-7e5b8e1051bd
இணையத் தீங்கைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் அவசியம் என்று மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பாட்சில் கூறியுள்ளார். - கோப்புப் படம்

கோலாலம்பூர்: இணையத்தின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டத்தில் (சிஎம்ஏ) திருத்தங்களை மலேசிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கருத்து வேறுபாடு, சுதந்திரமான பேச்சு ஆகியவற்றை ஒடுக்கும் அபாயத்தை அச்சட்டம் கொண்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்தபோதும், திருத்த மசோதாவுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 40 பேர் எதிராகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 9) வாக்களித்தனர்.

இணைய மோசடி, துன்புறுத்தல், குழந்தைகள் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட இணையத் தீங்குககளைச் சமாளிக்க அரசாங்கம் தற்போதுள்ள சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் டிசம்பர் 9 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

“பேச்சுரிமை உள்ளது. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்தின் மூலம் அரசாங்கத்துக்கு வழங்கப்படுகிறது,” என்றார் திரு ஃபாஹ்மி.

இந்த மசோதாவானது உள்ளடக்க மீறல்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பதுடன் சட்ட அமலாக்கத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது, அதாவது எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியும் பிடி ஆணை (வாரண்ட்) இன்றி தேடுவதற்கும் கைதுசெய்வதற்கும் உரிமை உண்டு. சட்டத்தின் கீழ் சேவை வழங்குநர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்படலாம். அத்துடன், மீறல்கள் குறித்த விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு பயனர் தரவுகளை வெளியிட நிர்பந்திக்கப்படலாம்.

இந்த மசோதாவை வரைவதில் பங்குதாரர்களுடன் 20க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன என்று திரு ஃபாஹ்மி கூறினார்.

இணையத் தளங்களை முடக்கவும், சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பொறுப்பேற்கச் செய்யவும் மற்ற ஆசிய அரசாங்கங்களின் முயற்சியில் மலேசியா இணைகிறது. கோலாலம்பூரிலிருந்து புதுடெல்லி, கான்பெர்ரா வரை, அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களின் கருத்தை திசைதிருப்பக்கூடிய சமூக ஊடகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அதிகாரிகள் பேரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

மெட்டா தளங்கள் உட்பட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த காலங்களில் உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்கியதாகக் கூறியுள்ளன. ஆனால் அதிகப்படியான ஒழுங்குமுறை பொது உரையாடலுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் இணையத் தளங்களில் நியாயமற்ற சுமையை வைக்கிறது என்று வாதிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்