போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் போதைப்பொருள்களைக் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயது சிங்கப்பூர் ஆடவர் மலேசியாவில் பிடிபட்டு, சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
மலேசிய அதிகாரிகள் அவரை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். அன்றைய தினமே சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.
2014 முதல் 2024 வரை பத்தாண்டு காலம் நிகழ்ந்த பல்வேறு போதைப்பொருள் குற்றங்களில் அந்த ஆடவருக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
2014 ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், 2017 ஜூன் 12ஆம் தேதி நீதிமன்றம் வர அவர் தவறினார்.
அதனால் அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது என்று சிஎன்பி திங்கட்கிழமை (அக்டோபர் 21) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.