மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் சரிந்தது

2 mins read
3c76c3e1-07ff-4404-9eb1-7d3b3d6c70ca
சீன மகப்பேறு மருத்துவமனையில் தாதியர்கள் எம்.சி. சான், எஸ். ஜெயலட்சுமி புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொட்டிலில் வைக்கின்றனர். மலேசியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. - படம்: த ஸ்டார் ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது என்று அந்நாட்டின் புள்ளியியல் துறை (டிஓஎஸ்எம்) கூறியது.

புதன்கிழமை அன்று (மே 14) முதல் காலாண்டின் மக்கள்தொகை அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 11.5% குறைந்து 93,500 குழந்தைகள் பிறந்தன என்றும் இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 105,613 குழந்தைகள் பிறந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

“உயிரோடு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு குறைந்தது,” என்று தனது மலேசிய முதல் காலாண்டு மக்கள் தொகை 2025 அறிக்கையில் புள்ளியியல் துறை குறிப்பிட்டது.

குழந்தைப் பிறப்பு குறைந்தது, நாட்டில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.

பெண் குழந்தைகளைவிட (45,376) ஆண் குழந்தைகளின் (48,124) எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அதாவது ஒவ்வொரு 100 பெண் சிசுக்களுக்கு 106 ஆண் சிசுக்கள் பிறந்தன.

மலேசியாவில் சிலாங்கூரில் 19.5% கூடி ஆக அதிகமான 18,254 குழந்தைகள் பிறந்தன. லபுவானில் ஆகக் குறைவாக 0.3 விழுக்காடு குறைந்து 278 குழந்தைகள் மட்டுமே பிறந்தன.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் குழந்தைப் பெற்ற பெரும்பாலான தாய்மார்கள் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 49,816. இதற்கு அடுத்ததாக 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களும் (39.3%), நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் (6.0%) அதிக குழந்தை பெற்றனர்.

ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

இன அடிப்படையில் மலாய்காரர்கள், ஒட்டுமொத்த குழந்தை பிறப்புகளில் 68.8 விழுக்காடு பங்கை வகிக்கின்றனர். இதர மண்ணின் மைந்தர்களின் (பூமிபுத்ரா) குழந்தை பிறப்பு விகிதம் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் 12.3 விழுக்காட்டைவிட 12.6 விழுக்காடாக அதிகரித்தது. பூமிபுத்ரா சாபா, பூமிபுத்ரா சரவாக், மலேசிய தீபகற்பத்தில் உள்ள பூமிபுத்ராக்கள் இதர மண்ணின் மைந்தர்களில் உள்ளடங்குவர்.

சீனர், இந்திய இனத்தவர்களிடையே குழந்தை பிறப்பு முறையே 8.6%, 3.8%ஆகக் குறைந்தது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது முறையே 9.6%, 4.2%ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்