தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்-சிங்கப்பூர் எல்லை: இரண்டாவது கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைச் சோதனையிடும் மலேசியா

2 mins read
693a6781-20b5-4cf3-888e-0e8c70b374d8
ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி 150,000 பேர் ‘மைரென்டாஸ்’ மற்றும் ‘மைடிரிப்’ ஆகிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவுத் திட்டங்களுடன் பதிவு செய்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கு ஜோகூர் வழியாகப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்காக இரண்டாவது கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையை மலேசியா சோதனையிடுகிறது. இதுதொடர்பான முன்னோட்டத் திட்டம் ஜூன் 23ஆம் தேதியன்று தொடங்கியது.

இந்த கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவுத் திட்டத்தைப் பயன்படுத்த 35,000க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியர்களுக்கான குடிநுழைவுச் சோதனைகளை விரைவுபடுத்த இந்தப் புதிய திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

புதிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறைக்கு ‘மைரென்டாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி வழியாகப் பேருந்து மூலம் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

துவாஸ் அருகில் உள்ள சுல்தான் அபுபக்கர் சோதனைச்சாவடியில் ‘மைடிரிப்’ கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறைக்கான முன்னோட்டத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது.

ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி 150,000 பேர் ‘மைரென்டாஸ்’ மற்றும் ‘மைடிரிப்’ ஆகிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவுத் திட்டங்களுடன் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அடிக்கடி பயணம் செய்பவர்கள்.

இந்த இரு கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறைகளும் சாத்தியமானவையா என்பதைக் கண்டறிய மூன்று மாதங்களுக்கு முன்னோட்டம் திட்டம் நடத்தப்படுவதாக ஜோகூர் மாநிலத்தின் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபாஸ்லி முகம்மது சாலே தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி ஆன்ட்ராயிட் கைப்பேசிகளைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே ‘மைரென்டாஸ்’ கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

“மூன்றாவது கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் பயணம் மேற்கொள்வோருக்கு எந்த கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை உகந்தது என்பதை பார்க்கலாம்,” என தி ஸ்டார் நாளிதழிடம் திரு முகம்மது ஃபாஸ்லி கூறினார்.

குறிப்புச் சொற்கள்