மலேசியப் பதிவெண் கொண்ட காரில் போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மலேசிய ஆடவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அந்த கார் பாதுகாப்புச் சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது காரின் பின்பக்கத்தில் ஹெராயின் பொட்டலங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டது.
அந்த 22 வயது மலேசிய ஆடவரிடமிருந்து கிட்டத்தட்ட 4.7 கிலோ எடைகொண்ட ‘ஹெராயின்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் (ஐசிஏ) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் (சிஎன்பி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“ஒரு பெரிய பொட்டலத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக நாங்கள் சந்தேகப்பட்டோம். அதைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பெரிய பொட்டலத்தில் 4,723 கிராம் எடையுள்ள பத்து ஹெராயின் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு கிட்டத்தட்ட $331,400க்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு வாரத்திற்கு சுமார் 2,240 போதைப்புழங்கிகள் உட்கொள்வதற்குப் போதுமானது.
கைதானவருக்கு எதிராக விசாரணை தொடர்கிறது.
சட்டத்தின்கீழ், 15 கிராமுக்குமேல் ‘ஹெராயின்’ போதைப்பொருளைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.