உலகிலேயே ஆக பரபரப்பான எல்லை தாண்டிய பயணங்களில் சிங்கப்பூர், மலேசியா இடையிலான பயணங்களும் ஒன்று.
கடந்த மே 26ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறைக் காலத்தில் மட்டும் 18 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த எல்லையைப் பயன்படுத்தினர்.
அதனால், சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் மலேசியாவின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையும் (ஏகேபிஎஸ்) அணுக்கமாகப் பணியாற்றி வருகின்றன.
இருப்பினும், இரு நாடுகளின் தேசிய தினங்களான ஆகஸ்ட் 9 (சிங்கப்பூர்), ஆகஸ்ட் 31 (மலேசியா) ஆகிய நாள்களில், அந்த இரு நாட்டு அரசாங்க அமைப்புகளும் ‘கேக்’ பரிமாறிக்கொள்வது ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகத் தொடர்கிறது.
‘தொடுவானம்’ என்னும் இந்த ஆண்டின் சிங்கப்பூர் தேசிய தினக் கருப்பொருளால் அலங்கரிக்கப்பட்ட ‘எஸ்ஜி61 கேக்’ ஒன்றை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (ஏகேபிஎஸ்) சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்துக்கு வழங்கியது.
அந்த நிகழ்வு துவாஸ் சோதனைச் சாவடியில் நடைபெற்றது.
அதேபோல, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், இரு நாடுகளின் வானளாவிய கட்டடக் காட்சிகளையும் அவற்றுக்கு இடையே உள்ள நீர்நிலையையும் சுட்டிக்காட்டும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘எஸ்ஜி61 கேக்’ வழங்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தை மலேசிய முகமையின் ‘சிந்தனை மிகுந்த செயல்பாடு’ என்று வர்ணித்து நன்றி தெரிவித்த குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், இரு முகமைகளுக்கும் இடையிலான அணுக்க ஒத்துழைப்பை அச்செயல் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டது.


