கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒருவர் மாண்டதுடன் பலர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து தனது முன்னாள் பங்காளியால் இயக்கப்பட்டது என்றும் அனுமதி இன்றி தனது நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டதாகவும் சூப்பர் நைஸ் விரைவுச்சேவை பேருந்து நிறுவனம் திங்கட்கிழமை (அக்டோபர் 13) கூறியது.
காயமடைந்தோரில் மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 55 வயது திரு ஆர். ரமேஷ் சந்திரனும் அவரது மனைவியான 58 வயது ஏ. சரஸ்வதியும் அடங்குவர். சிங்கப்பூரரான திருவாட்டி சரஸ்வதியுடன் திரு ரமேஷ், பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போ நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது தாயாரின் 80வது பிறந்தநாளைக் கொண்டாட அவர் தமது மனைவியுடன் அங்கு சென்றுகொண்டிருந்தார்.
விபத்தில் தமது அண்ணனும் அண்ணியும் சுயநினைவு இழந்ததாகத் திரு ரமேஷின் தம்பியான 42 வயது திரு ரேணுகேஸ்வரன் மேனன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
“என் அண்ணனுக்குச் சுயநினைவு திரும்பியபோது அவரால் நகர முடியவில்லை. அந்தக் காரிருளில் தமது மனைவியை அவர் அழைத்தார். என் அண்ணி பதிலளிக்கும் வரை அவர் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்,” என்று திரு ரேணுகேஸ்வரன் தெரிவித்தார்.
விபத்தின்போது தமது சகோதரர் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் சுயநினைவு இழந்ததாகவும் அவர் கூறினார்.
தமது அண்ணனையும் அண்ணியையும் வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஈப்போவில் உள்ள சூப்பர் நைஸ் விரைவுச்சேவைப் பேருந்தின் அலுவலகத்துக்குச் சனிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை 6 மணி அளவில் சென்றிருந்ததாகத் திரு ரேணுகேஸ்வரன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சொன்ன நேரத்துக்குப் பேருந்து அவ்விடத்தை அடையாதபோது அலுவலகத்தில் இருந்தோரிடம் தொடர்ந்து பலமுறை தகவல் கேட்டதாக அவர் கூறினார்.
ஆனால் தங்களிடம் பயணிகள் பட்டியல் இல்லை என்று அலுவலகத்தில் இருந்தோர் பதிலளித்தாக அவர் தெரிவித்தார்.
காயமடைந்த தம்பதியர் சிலாங்கூரில் உள்ள செர்டாங்கில் இருக்கும் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
திரு ரமேஷின் உடலிலும் முகத்திலும் பல காயங்கள் ஏற்பட்டன.
அவரது தாடை எலும்பு இருக்க வேண்டிய இடத்திலிருந்து விலகியதாகவும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி சரஸ்வதிக்குக் கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவற்றுடன் சேர்த்து, அவருக்கு மற்ற பல காயங்களும் ஏற்பட்டன.
அவரது உதடுகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
அவற்றுக்குத் தையல் போடப்பட்டது.
விபத்தில் பேருந்து ஓட்டுநருக்கும் அவரது உதவியாளருக்கும் மற்ற பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. அந்தப் பயணிகளில் நால்வர் சிங்கப்பூரர்கள்.
அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் கடுமையானதல்ல என்றும் அதே நாளில் மருத்துவமனையிலிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட சூப்பர் நைஸ் விரைவுச்சேவைப் பேருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சிங்கப்பூரில் உள்ள பூன் லே வட்டாரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பேருந்தில் 29 பேர் இருந்தனர்.
சனிக்கிழமை (அக்டோபர் 11) அதிகாலை 3.15 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் இயூசோஃப் தெரிவித்தார்.
விபத்தில் 59 வயது மலேசிய ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.