நிரந்தரவாச விண்ணப்ப மோசடியில் சிக்கிய சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியத் தம்பதி

நிரந்தரவாச விண்ணப்ப மோசடியில் சிக்கிய சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியத் தம்பதி

2 mins read
5ffb045a-a2fb-4587-a5e7-1b7b0561d1fa
மலேசியத் தம்பதி சுமார் எட்டு மாத காலத்திற்குள் $80,000க்கும் அதிகமாகச் செலவழித்தும், தங்களின் நிரந்தரவாசத் தகுதியைக் கடைசிவரை பெறவில்லை. - படங்கள்: மதர்ஷிப்

சிங்கப்பூரில் நிரந்தரவாசத் தகுதி பெற உதவுவதாக உறுதியளித்த ஒரு மோசடிக்கு பலியான மலேசியத் தம்பதி $80,000 பணத்தை இழந்தனர்.

பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இந்தத் தம்பதி, தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியைப் பெற விரும்பினர்.

ஜோகூர் பாருவைப் பூர்வீகமாகக் கொண்ட, டான் என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்தப் பெண், சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பங்களுக்கு உதவுவதாகக் கூறி, ‘வாழ்க்கைத்தொழில் திட்டமிடல், ‘நிலையான பாதை’ போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்திய ஒரு ஃபேஸ்புக் விளம்பரத்தை 2025 ஏப்ரலில் முதன்முதலில் கண்டதாக சீன நாளிதழான ஷின் மின் டெய்லியிடம் தெரிவித்தார்.

இந்த விளம்பரம் அவரது ஆர்வத்தைத் தூண்டியதால், அவர் அந்த விளம்பரதாரரைத் தொடர்புகொண்டார். இதைத்தொடர்ந்து, தம்பதியின் தகுதியைச் சரிபார்ப்பதற்காக, அவர்களது வேலை அனுமதி அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு ‘விண்ணப்ப செயல்முறை’ மற்றும் கட்டணப் பட்டியல்’ ஒன்று வழங்கப்பட்டது. அதில், ஒவ்வொருவரும் $100 விண்ணப்பக் கட்டணம், $200 வைப்புத்தொகை, $1,200 ‘ஆவண சரிபார்ப்புக் கட்டணம்’ ஆகியவற்றைச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்திய மறுநாள், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) சின்னம் போல் தோற்றமளிக்கும் ஒரு கடிதத்தை அவர்கள் பெற்றனர். அவர்களது விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த வாரம் ஐசிஏ கட்டடத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், திட்டமிடப்பட்ட ‘நேர்காணல்’ நாளன்று, அவர்கள் வழங்கிய தகவல்கள் போதுமானதாக இல்லை என்றும் அதனால் அவர்களால் நேர்காணலைத் தொடரமுடியாது என்றும் திடீரென தம்பதியிடம் கூறப்பட்டது.

அதன்பிறகு, தம்பதியினர் ஒவ்வொருவரும் ஓர் உள்ளூர் நிறுவனத்தில் முதலீடு செய்ய $3,000யும், தங்கள் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதற்காக ஒரு மொழிப் படிப்பில் சேர $5,140யும் செலுத்துமாறு கேட்கப்பட்டதாக டான் கூறினார்.

மேலும், முழு விண்ணப்ப செயல்முறையும் ரகசியமானது என்றும், அதனால் அவர்கள் ஒவ்வொருவரும் $2,000 ‘ரகசிய வைப்புத்தொகை’ செலுத்தவேண்டும் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. இருப்பினும், கோரிக்கைகள் அத்துடன் நின்றுவிடவில்லை.

‘சமூகப் பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற போர்வையில், தம்பதி ஆறு மாதங்களுக்கு மாதம் $2,700 நன்கொடையாக வழங்குமாறு கேட்கப்பட்டனர்.

2025ஆம் ஆண்டின் இறுதியில், அந்த மோசடிக்காரர், தம்பதியினரிடம் அவர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஆனால் அவர்களின் மறுநுழைவு அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு ஒவ்வொருவருக்கும் கூடுதலாக $12,500 தேவைப்படும் என்று கோரினார்.

அந்தத் தம்பதி சுமார் எட்டு மாத காலத்திற்குள் $80,000க்கும் அதிகமாகச் செலவழித்தும், தங்களின் நிரந்தரவாசத் தகுதியைக் கடைசிவரை பெறவில்லை.

அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்து, காவல்துறையில் புகார் அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்