மலேசியாவிலிருந்து தருவிக்கப்படும் ‘ஹேப்பி ஃபேமிலி ஓட்மீல் குக்கீஸ்’ தின்பண்டத்தைத் திரும்பப்பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அவ்வுணவுப் பொருளின் (200 கிராம்) பொட்டலங்களைச் சோதனையிட்டபோது அதில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பால் கலந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.
ஆனால், பொட்டலத்தில் அதுகுறித்துக் குறிப்பிடப்படவில்லை என்றும் அது சொன்னது.
எனவே அவற்றைத் திரும்பப் பெறும்படி, இறக்குமதி நிறுவனமான ‘சி எம் எம் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்’ டுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது.
“ஓர் உணவில் இருக்கும் ஒவ்வாமைப் பொருள்கள் அவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்,” எனக் கூறிய அமைப்பு, அவற்றை உணவுப் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டியது கட்டாயம் என்றது.
பாதிக்கப்பட்ட 200 கிராம் ‘ஹேப்பி ஃபேமிலி ஓட்மீல் குக்கீஸ்’ பொட்டலங்களை வாங்கியோர், பாலால் ஒவ்வாமை ஏற்படக்கூடியவர்கள் என்றால், அவற்றை உண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கெனவே உண்டிருந்தால், மருத்துவரை நாடும்படி அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

