துவாஸ் சோதனைச் சாவடி வழியாக வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அன்று சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேற முயன்றுள்ளார் மலேசிய ஆடவர் ஒருவர்.
அவர் லாரியின் சரக்குப் பகுதியில் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முகமது இஸுவான், வயது 32, என்ற அந்த மலேசிய ஆடவரும் அவரது கூட்டாளியான 44 வயது லாரி ஓட்டுநரான ரமேஷ் முனுசாமியும் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் சனிக்கிழமை (ஜூலை 20) அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அன்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சிங்கப்பூரை விட்டுச் செல்ல முயன்ற மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை கூடுதல் சோதனைக்காக பிற்பகல் 12.00 மணியளவில் தடுத்து நிறுத்தினர்.
அவ்வாறு சோதனை செய்யும்போது லாரியின் சரக்குப் பகுதியில் ஆடவர் ஒருவர் எந்தவித பயண ஆவணங்களும் இல்லாமல் ஒளிந்துகொண்டு இருப்பதைக் கண்டனர்.
முகமது இஸுவான் என்ற அந்த மலேசிய ஆடவர்மீது தமது மலேசிய பாஸ்போர்ட்டை காண்பிக்கத் தவறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.