கோலாலம்பூர்: மிகவும் சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் உலகத் தரவரிசையில் மலேசியா பல படிகளைக் கடந்து உச்சநிலையை நெருங்கிவருகிறது.
ஆயினும் வட அமெரிக்காவின் இரு நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை அதற்கு இன்னும் கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா என்ற அவ்விரு நாடுகளுக்கும் சிங்கப்பூரர்களுக்கு எளிதாகச் செல்ல முடிகிறது.
கடப்பிதழ்களின் வலுவைக் கணிக்கும் இரு உலக அளவிலான குறியீடுகளிலும் மலேசியா அதன் ஆக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நாட்டுக்குச் செல்லும் முன்பாகவே ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்பதை அவ்விறு குறியீடுகளும் கணிக்கின்றன.
‘பாஸ்போர்ட் இன்டெக்ஸ் எனப்படும்’ அப்பட்டியல் ‘ஆர்டன் கெப்பிட்டல்’ என்ற உலக நிதி ஆலோசக நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவையும் சிங்கப்பூரையும் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இணைந்து இருப்பதாக அது தெரிவித்தது. அவ்விரு அண்டை நாடுகளும் குறியேட்டில் முதலிடத்தில் உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குப் பின் உள்ளன.
‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ என்ற மற்றொரு முதலீட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதில் மலேசியாவுக்கு ஆறாம் இடம் கிடைத்தது. அந்நாடு 2025ஆம் ஆண்டுப் பட்டியலில் 12ஆம் நிலையில் இருந்தது,
அந்த இரண்டு மதிப்பீட்டுக் குறியீடுகளில் நெடுநாள் இயங்கும் ஹென்லியின் குறியீடு அதிக அளவில் பலரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த அளவு மதிப்பு பெற்ற மலேசிய கடப்பிதழால் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்வது குழப்பமாகவே இருந்துவருகிறது. ஹோலிவூட், டிஸ்னிலாந்து போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல மலேசியர்கள் சிரமப்படுகின்றனர்.
சிங்கப்பூரர்களுக்கு அதுபோன்ற சிக்கல்கள் இல்லை. விசா அற்ற திட்டத்தின்படி அவர்கள் சுற்றுலா அல்லது வர்த்தகக் காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு 90 நாள்கள் வரை செல்லலாம்.
மலேசியர்கள் அமெரிக்கா செல்வதற்கு S$240 (US$185) கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டுவதோடு தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நேரில் சென்று அங்கு நேர்காணல் வழங்கவேண்டும்.
