கடற்பாலத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 16) ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் காரை சாலையிலேயே விட்டுவிட்டுத் தப்பியோடிய சிங்கப்பூர் ஓட்டுநரை மலேசியக் காவல்துறை தேடி வருகிறது.
ஜோகூர் பாரு செல்லும் மோட்டார் சைக்கிள் தடத்தில் விபத்து நிகழ்ந்தது.
அதில் இரு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
விபத்து குறித்து பிற்பகல் 2.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் பாரு தென் மாவட்டக் காவல்துறை தெரிவித்தது.
“சிங்கப்பூர் ஓட்டுநர் தவறான பாதையில் சென்றுள்ளார். பிறகு மோட்டார்சைக்கிள் தடத்தில் காரைப் பின்னோக்கிச் செலுத்தியுள்ளார். அப்போது வந்த இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகளால் மோதலைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் காரின் பின்பக்க இடதுபுறத்தில் மோதினர்,” என்று காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் 26 வயது சிங்கப்பூரர். மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை. இருவருக்கும் கைகளிலும் கால்களிலும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்துக்குப் பின் அவர்கள் மூவரும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
புகார் அளிக்காத கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல்துறை கூறியது.
தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
விபத்து தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஒரு காணொளியும் வெளியாகியுள்ளது. அதில் இரு மோட்டார் சைக்கிள்கள் காரின் பின்புறம் மோதுவதும் ஒருவர் தரையில் விழுந்துகிடப்பதும் பதிவாகியுள்ளது.
விபத்தால் அத்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் பலர் வெகு நேரம் காத்திருக்க நேர்ந்தது.
