மோசடிக் கும்பலுக்கு உதவிய குற்றத்திற்காக 22 வயது தாரணேஸ்வரன் கிருஷ்ணாவுக்கு ஈராண்டுகள், இரண்டு மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமையன்று (டிசம்பர் 29) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்ற நடவடிக்கைமூலம் ஒருவர் பலனடைய உதவிய குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட்ட கும்பலிடம் சிக்கி $190,000க்கும் அதிகமான ரொக்கத்தையும் விலை மதிப்புமிக்க பொருள்களையும் இரு பெண்கள் இழந்தனர்.
அவர்களிடமிருந்து 40,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை மோசடிக் கும்பல் சார்பாக தாரணேஸ்வரன் பெற்றதாகக் கூறப்பட்டது.
அவர், டெலிகிராம் செயலி வழியாக மோசடிக்காரர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாகவும் அதற்குச் சம்பளமாக ஒருநாளைக்கு 158 வெள்ளி (500 ரிங்கிட்) அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இழந்த ரொக்கம் மீட்டெடுக்கப்பட்டதா அவர்கள் மோசடிப்பேர்வழிகளிடம் தொலைத்த பாக்கிப் பணம் என்னவானது போன்ற விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
தாரணேஸ்வரன் மலேசியாவைச் சேர்ந்தவர்.
உறவினர் ஒருவர் மூலம் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் இருக்கும் வேலை குறித்து அவர் அறிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
வேலையின் ஒரு பகுதியாக, டெலிகிராம் குழு ஒன்றில் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வழிமுறைகளை அவர் பின்பற்ற வேண்டியிருந்தது.
அந்தக் குழு அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் குற்றக் கும்பலுடன் தொடர்புடையது.

