தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு: மலேசியர்கள் மூப்படைதலை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர்

2 mins read
424b137d-d0fd-4b8c-af8b-7e43c00c9771
தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதி குறித்து பத்தில் ஆறு மலேசியர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அண்மைய ‘இப்சோஸ் மலேசியா’ ஆய்வு குறிப்பிடுகிறது. - படம்: ஏஎஃப்பி

மூப்படைதல் குறித்து மலேசியர்கள் அதிக  நம்பிக்கையுடன் இருப்பதாக ‘இப்சோஸ் மலேசியா’ நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

தற்போது, மூப்படைதல் 60 வயதுக்கு மேல் தொடங்குகிறது என்று  சராசரி மலேசியர்கள் நம்புவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 

2018ல் 56 வயதுக்கு மேல் மூப்பு ஏற்படுவதாக மலேசியர்கள் பொதுவாகக் கருதினர். மனித மூப்பு, சராசரியாக 66 வயதில் தொடங்குவதாக 32 நாடுகளில் கருதப்படுகிறது. 

உலகின் மக்கள் தொகை மூப்படைந்து வந்தாலும் கண்ணோட்டங்கள் 2018க்குப் பிறகு அவ்வளவாக மாறவில்லை என்று இப்சோஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் அருண் மேனன் தெரிவித்தார்.

தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதி குறித்து பத்தில் ஆறு மலேசியர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த மனப்போக்கு, வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளைக் காட்டிலும் மலேசியாவில் அதிகம் காணப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக, அதிக ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள மக்களைக் கொண்டுள்ள நாடுகள், மூப்பை அவ்வளவு ஆவலுடன் எதிர்நோக்குவதில்லை.

“மற்ற தென்கிழக்காசியர்களைப் போல மலேசியர்கள் மூப்பை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்,” என்று திரு அருண் கூறினார்.

தங்கள் ஆயுட்காலத்தை மலேசியர்கள் குறைத்து எடை போடுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இருந்தபோதும், இனிவரும் சவால்கள் குறித்து திரு அருண் எச்சரித்தார்.

2043க்குள் மலேசியா மூப்படைந்த நாடாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுவதால் சுகாதாரத் துறை மீதும் சமூக ஆதரவு அமைப்புகள் மீதும் மலேசியா கூடுதலாகக் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

மூப்பு குறித்து மலேசியர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அவர்களது சுகாதாரம், தன்மானம், நிறைவு ஆகியவற்றை உறுதிசெய்யும் வலுவான சுகாதாரக் கட்டமைப்பின் தேவையைத் திரு அருண் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்