மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டின் உயர் நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காலிகமாக விடுவித்துள்ளது.
ஆனால் புதிய சாட்சியங்கள் கிடைத்தால் அவற்றின் அடிப்படையில் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப்படலாம்.
1எம்டிபி தொடர்பான இந்தத் தகவலை நஜிப்பின் வழக்கறிஞர், வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெளியிட்டார்.
கையூட்டு பெற்றது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகிய குற்றங்களுக்காக நஜிப், ஆகஸ்ட் 2022லிருந்து சிறைவாசம் இருந்து வருகிறார்.
1எம்டிபியின் முன்னாள் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 4.5 பில்லியன் டாலர் கையாடப்பட்டதாக மலேசிய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
2019 முதல் இந்த வழக்கு பல்வேறு முறை நிலுவையில் இருந்ததை அடுத்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப்பைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கும் கோரிக்கைக்கு இணங்கியது.
இந்த முடிவு நியாயமானது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், தாங்கள் தயாராக இருக்கும்போது குற்றச்சாட்டுகளை மீண்டும் கொண்டு வரலாம் என்றும் நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ஷஃபீ தெரிவித்தார்.
“இதனால் நஜிப் தொடர்ந்து காத்திருக்க வேண்டியதில்லை. நஜிப்பின் தலை மீது தொங்கவிடப்பட்ட வாள், இப்போது இல்லை,” என்று திரு ஷஃபீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, மலேசிய தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
நஜிப்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது இரண்டாவது முறையாகும்.
இதே போல, நடைமுறை தாமதங்களால் நீதிமன்றம் கடந்த ஆண்டு நஜிப்பைக் குற்றச்சாட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்தது.