தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மீண்டும் மலேசியாவின் புரோட்டோன்

2 mins read
14de234b-aa48-443b-b720-f5c59d244ca2
லெங் கீ ரோட்டில் உள்ள புரோட்டோனின் புதிய காட்சிக்கூடம். - படம்: வின்கார் குழுமம்

மலேசியாவில் கார்களைத் தயாரிக்கும் தேசிய நிறுவனமான புரோட்டோன் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ளது.

இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி புரோட்டோன் அதன் மின்வாகனத்தை இங்கு அறிமுகம் செய்கிறது.

அதே நாள் லெங் கீ ரோட்டில் இருக்கும் நிறுவனத்தின் புதிய காட்சிக்கூடத்தில் சிங்கப்பூர் விநியோகிப்பாளரான வின்கார் குழுமத்திடமிருந்து இ.மாஸ் 7 எஸ்யுவீ (e.Mas 7 SUV) எனும் மின்வாகனங்களை எட்டுப் பேர் பெற்றுக்கொள்வர்.

2014ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய புரோட்டோன், 11 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் இங்கு வந்துள்ளது.

புரோட்டோன் சீனாவின் பெரிய மோட்டார் வாகன நிறுவனமான கீலியுடன் சேர்ந்து உருவாக்கிய புதிய தலைமுறை மின்வாகனங்களே அது சிங்கப்பூர் திரும்புவதற்கு முக்கியக் காரணம். நடுத்தர இ.மாஸ் 7 ரக மின்வாகனங்களைத் தொடர்ந்து சிறிய இ.மாஸ் 5 ரக மின்வாகனங்கள் அடுத்த ஆண்டு (2026) இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

சிங்கப்பூருக்கு மின்வாகனங்களை ஏற்றுமதி செய்வது புரோட்டோனின் வெளிநாட்டு விரிவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி லி சுன்ரோங் (Li Chunrong) தெரிவித்தார்.

“சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த சந்தை. இங்கு நாங்கள் திறம்படச் செயலாற்றினால், மேலும் பல நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் முனைவர் லி.

சிங்கப்பூரின் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 11) வழங்கிய நேர்காணலில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் கண்டதிலிருந்து இ.மாஸ் 7 மின்வாகனங்கள் ஆக அதிக எண்ணிக்கையில் மலேசியாவில் விற்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி ஏறக்குறைய 5,000 வாகனங்கள் விற்பனையாயின.

நேப்பாளத்திற்கும் டிரினிடேட் டொபேகோவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களும் அவற்றுள் அடங்கும். புரோட்டோன் நிறுவனத்தின் மூன்றாவது வெளிநாட்டுச் சந்தை சிங்கப்பூர். ஆண்டிறுதியில் மொரி‌ஷியசுக்குச் செல்லவும் அது திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்