உட்லண்ட்சில் ஜூன் 11ஆம் தேதி காலை ஒரு லாரியும் நடையர் ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்தில் சைக்கிளை ஓட்டிய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
உட்லண்ட்ஸ் அவென்யூ 9 அருகே காலை 6.35 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 24 வயது பெண் பாதசாரியும் 53 வயது ஆண் சைக்கிளோட்டியும் சுயநினைவுடன் இல்லை. அந்த ஆடவர் பின்னர் இறந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
சைக்கிளோட்டியின் மகளான ஓங் என்பவர், தம்முடைய பெற்றோர் ஒரே உணவுத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக ஷின் மின் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தம் வீட்டிலிருந்து 10 நிமிட தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்த 28 வயது பெண் சொன்னதாக ஷின் மின் குறிப்பிட்டது.
தம் தந்தை அன்றாடம் சைக்கிளில் வேலைக்குச் செல்வார் என்று சொன்ன ஓங், தம் தாயாரைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தந்தை வீட்டிலிருந்து புறப்படுவார் என்றார்.
அன்றைய தினம் காலை 8 மணியளவில் தம் தாயார் வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு, விபத்து நிகழ்ந்த இடத்தைக் கடந்து சென்றார். அப்போது தம் தந்தையுடையது போன்ற சைக்கிள் ஒன்றை தம் தாயார் கண்டதாக ஓங் கூறினார்.
தந்தையின் கைப்பேசி எண்ணில் தம் தாயார் தொடர்புகொண்டபோது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் விபத்து குறித்து அவரிடம் தெரியப்படுத்தினார். அந்த ஆடவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அந்த ஊழியர் சொன்னார்.
தம் தாயார் தம்மை தொடர்புகொண்டு நடந்ததைக் கூறிய பிறகு, இருவரும் மருத்துவமனைக்கு விரைந்ததாக ஓங் சொன்னார். ஆனால், அவர்கள் அங்கு சென்றடைவதற்குள் தந்தை இறந்துவிட்டார்.
இந்நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக லாரியை ஓட்டிய 69 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

