இணையவழித் தேர்வு முறையில் கோளாறு; ஐடிஇ தேர்வுகள் ஒத்திவைப்பு

இணையவழித் தேர்வு முறையில் கோளாறு; ஐடிஇ தேர்வுகள் ஒத்திவைப்பு

2 mins read
ac17535b-94dd-4b48-956f-011284145e97
ஜூன் 4 முதல் 11 வரை நடைபெறவிருந்த இணையவழித் தேர்வுகள், அதற்குப் பதிலாக அச்சிடப்பட்ட தாள்களைப் பயன்படுத்தி நடத்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்பக் கல்விக்கழக கல்லூரிகளில் (ஐடிஇ) ஜூன் 4 முதல் 11 வரை இணையவழித் தேர்வுகளை எழுதவிருந்த மாணவர்கள், தேர்வுச் செயல்திட்டம் முடங்கியதால் அதற்குப் பதிலாகத் தாள்களில் தங்கள் தேர்வுகளை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

வார இறுதி நாள்கள் நீங்கலாக, ஜூன் 2 முதல் 11 வரை இணையவழித் தேர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால், ஜூன் 4 ல் மாணவர்கள் கணினி அமைப்பை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று ஊடகங்களுக்கு அளித்த பதிலில் ஐடிஇ (ITE) தெரிவித்தது.

 ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகள் பாதிக்கப்படவில்லை.

இந்தப் பாதிப்பு கிழக்கு, மேற்கு,  மத்திய  கல்லூரிகளில் ஏற்பட்டதாக அது குறிப்பிட்டது.

இருப்பினும், எத்தனை மாணவர்கள், தேர்வுகள், வகுப்புகள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அது தெரிவிக்கவில்லை.

ஜூன் 4ல் தடைபட்ட தேர்வுகள், அச்சிடப்பட்ட வினாத்தாள்களுடன் ஜூன் 11ல் மாற்றியமைக்கப்பட்டன என்று ஐடிஇ கூறியது.

ஜூன் 5 முதல் ஜூன் 11 வரையிலான தேர்வுகள் திட்டமிட்டபடி அச்சிடப்பட்ட வினாத்தாள்களைப் பயன்படுத்தி நடைபெற்றதாக, ஜூன் 9ல் தெரிவித்தது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தாங்கள் சேவை வழங்குநருடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஐடிஇ கூறியது.

ஜூன் 4 காலை 9 மணிக்குத் தேர்விற்கு வந்த மாணவர்களால் தேர்வு அமைப்பிற்குள் நுழைய முடியவில்லை என்று ஐடிஇ கிழக்குக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ‘ரெட்டிட்’ தளத்தில் தெரிவித்தார்.

“தேர்வுக் கண்காணிப்பாளர் எங்களை அடுத்த வாரம் தேர்வுக்கு வருமாறு கூறுவதற்கு முன்பு வரை, தேர்வு நடைபெறும் இடத்தில் நாங்கள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் காத்திருந்தோம்,” என்று அந்த மாணவர் கூறினார்.

இணைய உருவாக்கம், வடிவமைப்பு  ஆகியவை தொடர்பான உயர் நைடெக் (Higher Nitec) படிப்பைப் பயிலும் ‌ஷேனன் ஓயி சியுன் யிங், ஜூன் 4ல் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளார்.

ஐடிஇ மேற்குக் கல்லூரியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்வு திட்டமிடப்பட்டிருந்ததாக 18 வயது ஷேனன் தெரிவித்தார். முடிவில், மாலை 4.50 மணிக்குப் பிறகு மாணவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
தேர்வுமாணவர்தடை