தீங்கிழைக்கும் மென்பொருள்: ஆண்ட்ராயிட் பயனர்கள் $69,000 இழப்பு

தீங்கிழைக்கும் மென்பொருள்: ஆண்ட்ராயிட் பயனர்கள் $69,000 இழப்பு

2 mins read
dfec60b0-1720-45be-958f-3c1f0698a7d5
மோசடிக்காரர்கள் முதியவர்களை வாட்ஸ்அப் வழி அணுகி, போலி ஆண்ட்ராய்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சிங்கப்பூரில் முதியவர்களைக் குறிவைத்து, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடிகளில், கடந்த மூன்று மாதங்களில் ஆண்ட்ராய்ட் பயனர்கள் குறைந்தது $69,000 இழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இதுபோன்ற குறைந்தது எட்டு மோசடிச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

முதியவர்களுக்கான பொழுதுபோக்குச் செயல்பாடுகள் என்ற பெயரில் ஃபேஸ்புக் அல்லது டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர். அதனை நம்பித் தொடர்புகொள்ளும் முதியவர்களை வாட்ஸ்அப் வழி அணுகி, விவரங்களைப் பகிர்வதாகக் கூறி ஒரு போலி ஆண்ட்ராய்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.

இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன், பயனர்களின் சாதனங்களிலிருந்து சிங்பாஸ் அல்லது ஸ்கேம்ஷீல்ட் செயலிகள் தானாகவே நீக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவர் தமது அனுமதியின்றி வங்கிப் பரிவர்த்தனை வரம்பும் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சட்ட அமைச்சு அல்லது காவல்துறையின் மோசடி தடுப்பு மையத்தின் அதிகாரிகள் எனப் பொய் அடையாளத்துடன் முதியவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடிப் பேர்வழிகள், சட்டவிரோத செயலியால் கைப்பேசி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் உதவ பணம் மற்றும் விலை மதிப்புள்ள உடைமைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி ஏமாற்றுகின்றனர்.

பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம் என்றும் அறிமுகமில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒருவேளை கைப்பேசியில் சந்தேகத்திற்குரிய செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஒய்ஃபை இணைப்பைத் துண்டித்து, ‘பிளைட் மோட்’டில் கைப்பேசியை வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கைப்பேசியை ‘ஃபேக்டரி ரீசெட்’ செய்ய வேண்டாம் என்றும் அது காவல்துறை விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்