நொவீனா பகுதியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் 21 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை ஆடவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. ஆடவரின் மரணத்தில் எந்தச் சூதும் இல்லை என்ற முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
“101 தாம்சன் சாலையில் உள்ள யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதியில் காலை 7 மணிவாக்கில் ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடப்பதாகத் தகவல் கிடைத்து, அதைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் விரைந்தனர்,” என்று தற்காப்புப் படை கூறியது.
ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக மருத்துவ உதவியாளர்கள்மூலம் உறுதி செய்யப்பட்டது. சம்பவம்குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
கடைத் தொகுதியில் உள்ள டாக்சி நிறுத்துமிடம் அருகே ஆடவர் கீழே மயங்கிக் கிடந்த படங்களும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் பார்க்க முடிந்தது.
சடலம் இருந்த இடத்தில் குறைந்தது நான்கு காவல்துறை வாகனங்களும் விசாரணை வண்டி ஒன்று இருந்ததையும் பார்க்க முடிந்தது.
சம்பவ இடத்தில் தடையங்களைச் சேகரிக்கச் சில தடுப்புகள் போடப்பட்டிருந்தன. பிற்பகல் 1.40 மணிவாக்கில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அங்குச் சென்றபோது தடுப்புகள் அகற்றப்பட்டிருந்தன.

