9.5 கிலோகிராம் எடையுள்ள போதைமிகு அபின் வைத்திருந்த ஆடவர் கைது

2 mins read
d71c9137-d2ec-4e70-af06-59d4bf81d176
67 வயது சிங்கப்பூரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

தீவு முழுதும் 12 நாள்களுக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்புச் சோதனை நடவடிக்கையில், இவ்வாண்டில் இதுவரை இல்லாத அளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

67 வயது சிங்கப்பூரர் ஒருவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி 9.5 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள்களுடன் பிடிபட்டார். அதோடு, 2.6 கிலோகிராம் ‘ஐஸ்’, 4,182 எரிமின்-5 மாத்திரைகள், 18 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களும் $25,000க்கும் அதிகமான ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டன.

போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு $1.4 மில்லியன் என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மதிப்பிட்டது.

அந்தச் சோதனை நடவடிக்கை ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. புக்கிட் தீமா, கிம் மோ, மவுண்ட்பேட்டன், ஹவ்காங் உள்ளிட்ட பகுதிகளில் அது மேற்கொள்ளப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, சந்தேகத்துக்குரிய 113 போதைப்பொருள் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். அதோடு, $1.54 மில்லியன் மதிப்புள்ள வெவ்வேறு போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 9.8 கிலோகிராம் போதைமிகு அபின், 3.3 கிலோகிராம் ‘ஐஸ்’, 620 கிராம் கஞ்சா ஆகியவை அடங்கும்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஆக இளையவர் சிங்கப்பூரரான 15 வயது சிறுவன். அவன் போதைப்பொருள் உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவனிடம் சிறிய அளவில் ‘ஐஸ்’ கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் சிங்கப்பூரரான மற்றொரு 15 வயது சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டான்.

அவ்விருவரும் மாணவர்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

“பதின்மவயதினர் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் நிலைமையில் நமது கவனம் குறைந்துவிடக் கூடாது என்பதற்கு இது அனைவருக்கும் ஒரு கடுமையான நினைவூட்டல்.

“போதைப்பொருள்கள், அவை ஏற்படுத்தும் கெடுதி ஆகியவற்றைப் பற்றி நாம் தொடர்ந்து நமது இளையர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்,” என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் துணை உதவி ஆணையர் சாஹர்லி லிமாட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்