திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட்டிருந்த ஏழு வாகனங்களைத் தனது வேனால் மோதிய 69 வயது ஆடவர், மதுபோதையில் ஓட்டியதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 12ஆம் தேதியின்போது 218 அங் மோ கியோ அவென்யூ 1 ல் நடந்த இந்தச் சம்பவம் பற்றி, பின்னிரவு 12.45 மணிக்கு தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
சிறிய காயங்களுக்குள்ளான ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
‘சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடன்ட்.காம்’ ஃபேஸ்புக் குழுவில் பதிவு செய்யப்பட்ட காணொளியில், கார் ஒன்றின் பின்புறம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.
அதற்கு அருகிலுள்ள வெள்ளி நிற சொகுசு வாகனத்தின் விளக்குகளில் ஒன்று நொறுங்கிய நிலையில் காணப்பட்டது. இதுபோல, சுற்றியுள்ள வேறு சில கார்களும் சேதமடைந்ததைக் காணொளி காட்டுகிறது.
மற்ற வாகனங்களை மோதிய பிறகு அந்த வேனிலிருந்து இறங்கிய ஓட்டுநர், நடப்பதற்குச் சிரமப்பட்டதாகவும் நிதானம் அடைவதற்குப் பிறரது உதவி தேவைப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

