கத்தியால் வெட்டித் தாக்கிய 77 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
b086653c-df87-4e3f-b9a6-997e287a9852
தாக்கப்பட்ட ஆடவருக்கு இடது மார்பில் நான்கு சென்டிமீட்டர் நீளத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: சியாவ்ஹோங்ஷு தளம்

ஆடவர் ஒருவரைக் கத்தியைக் கொண்டு வெட்டித் தாக்கியதன் தொடர்பில் 77 வயது ஆடவர் மீது ஜூலை 28ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

சைனாடவுன் பகுதியில் ஜூலை 27ஆம் தேதி ஆயுதங்கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக மன் யூ வா மீது குற்றம் சாட்டப்பட்டது.

திரு ஓங் ஹுவீ டெக் என்பவரது இடது மார்பில் 335 ஸ்மித் ஸ்திரீட்டில் அமைந்துள்ள சைனாடவுன் காம்ப்ளெக்சில் காலை 11.05 மணியளவில் கத்தியால் மன் வெட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலால் திரு ஓங்குக்கு நான்கு சென்டிமீட்டர் நீளத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

உதவி கோரி தங்களுக்கு ஜூலை 27ஆம் தேதி காலை 11.10 மணியளவில் அழைப்பு வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தகவல் தெரிவித்தனர்.

இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

மன் மீதான வழக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபணமானால் ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.

தாக்குதல் சம்பவம் நடந்தபின் அவ்விடத்தைக் காட்டும் பதிவு ஒன்று சமூக ஊடகத் தளம் ஒன்றில் வலம் வந்தது. அதில் சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் பகுதி ஒன்றில் தடுப்புகள் இடப்பட்டிருந்தன.

குறைந்தது இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அங்கு காணப்பட்டனர்.

இந்தப் பதிவு குறித்து இணையவாசிகள் பலரும் தங்களது அதிர்ச்சியைத் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தபோது தாங்கள் அவ்விடத்தின் அருகில்தான் இருந்ததாகவும் அபாய ஒலி தங்களுக்குக் கேட்டதாகவும் அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்