புக்கிட் பாஞ்சாங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் 88 வயது ஆடவர் ஒருவர், தம் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிக் கூறிய காவல்துறை புதன்கிழமை (ஜூன் 5ஆம் தேதி) பெட்டிர் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பிலிருந்து உதவி கோரி அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.
அங்கு சென்ற அதிகாரிகள் 74 வயது மாது ஒருவர், மூச்சு பேச்சின்றி படுத்திருந்ததைக் கண்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணையில் ஆடவரும் மாதும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் எனத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
கேள்விகளுக்குப் பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படை, உதவி கேட்டு பெட்டிர் சாலை புளோக் 137லிருந்து பின்னிரவு நேரம் 12.45மணிக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.
மாது சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுபற்றிய விசாரணை தொடர்வதாகவும் ஆடவர் மீது வியாழக்கிழமை (ஜூன் 6ஆம் தேதி) அன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் அறியப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் செய்தியாளர்கள் பிற்பகல் 1 மணிக்கு சென்றபோது, காவல்துறைத் தடுப்புகள் அகற்றப்பட்டிருந்தன.
அக்கம்பக்கத்தார் இந்தச் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தெரிவித்தனர்.

