தனது காதலியின் 11 வயது சிறப்புத் தேவையுடைய மகளை அவரது தாயார் முன்னிலையில் ஆடவர் ஒருவர் தாக்கியுள்ளார்.
தன்னைப் பொறுத்தவரை அந்தச் சிறுமி செய்தது தவறு என்பதற்காக அந்த ஆடவர் அச்சிறுமியை அறைந்ததுடன் பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்படும் வரை அடித்தார்.
சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவரை மோசமாக நடத்தியதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டை அந்த நபர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் அந்தச் சிறுமியின் தாயார், தெரிந்தே தாக்குதலை அனுமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, 36 வயதாகும் அந்த இருவரின் பெயரை வெளியிட அனுமதியில்லை.
அதிக செயல்பாட்டு மன இறுக்கம், சரளமாகப் பேசுவதில் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனக்குறைவுக் கோளாறு ஆகியவற்றால் அச்சிறுமி பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ரஞ்சகுணாளன் தெரிவித்தார்.
2020 ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த ஆடவர் தனியாகவே, இருவரும் சேர்ந்தோ அச்சிறுமியை ஏழு சம்பவங்களில் பிரம்பால் அடித்ததாகவும் திரு நிரஞ்சன் கூறினார்.
ஆகஸ்ட் 11, 2020 அன்று, சிறுமியின் ஆசிரியை, அவரது உடலில் பிரம்படி அடையாளங்களைக் கண்டறிந்து, முந்தைய தேதியில் அந்தப் பெண் வர முடியாததால், ஆகஸ்ட் 26 அன்று அந்தப் பெண்ணுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அந்தச் சந்திப்பு நடப்பதற்கு முன் 2020 ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று சிறுமிக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன.
தொடர்புடைய செய்திகள்
இரண்டு நாள்களுக்குப் பிறகு சிறுமி பள்ளிக்குச் சென்றபோது, அந்த ஆடவர் செய்ததைப் பற்றி தனது ஆசிரியரிடம் கூறினார். மேலும் அவர் தனது வீட்டுக்குத் திரும்புவதற்கு மிகவும் பயமாக இருப்பதாகக் கூறினார்.
இதைப் பற்றி ஆசிரியர் தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார். பள்ளி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்குத் தகவல் கொடுத்தது.
அதே நாளில், அமைச்சின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் 10 நாள்கள் மருத்துவமனையில் இருந்தார்.
இச்சம்பவம் பற்றி மருத்துவமனை காவல்துறையிடம் தெரிவிக்க, அந்த ஆடவரும் அவரது காதலியும் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 12ஆம் தேதி அவ்விருவருக்கும் தண்டனை விதிக்கப்படும்.
ஒரு குழந்தையைத் தவறாக நடத்தினால் அல்லது தெரிந்தே ஒரு குழந்தையைத் தவறாக நடத்த அனுமதித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.