காவல்துறைக்கு அவதூறு மின்னஞ்சல் அனுப்பியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

காவல்துறைக்கு அவதூறு மின்னஞ்சல் அனுப்பியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
2a23cfe4-0a0b-48cf-a78c-4793c18d7f4a
குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர், வரும் அக்டோபர் மாதம் தமது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

அவதூறுக் கருத்துகள் அடங்கிய பல மின்னஞ்சல்களை அனுப்பி, தொல்லை தந்ததாகக் கூறி, ஆடவர் ஒருவர்மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வோங் இயூ சூன், 47, என்ற அந்தச் சிங்கப்பூரர் இவ்வாண்டு மார்ச் - மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அம்மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்பட்டது. தாம் அளித்த புகார் தொடர்பில் காவல்துறையின் நடவடிக்கை மனநிறைவு அளிக்காததால் அவர் அவ்வாறு செய்ததாகச் சொல்லப்பட்டது.

வோங்கின் புகார் விவரம் குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

அவரது புகாரை மறுஆய்வு செய்த ஆண் கண்காணிப்பாளருக்கே அவர் பலமுறை மின்னஞ்சல் அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வோங் தமது மின்னஞ்சல்களில் காவல்துறையினரை ‘பெருத்த அவமானம்’ என்றும் ‘சக அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக அவர்கள் பொதுமக்களிடம் பொய்யுரைப்பதாகவும்’ சாடியிருந்ததாகக் கூறப்பட்டது.

வரும் அக்டோபர் மாதம் அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு துன்புறுத்தல் குற்றச்சாட்டிற்கும் அவருக்கு ஓராண்டுவரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காவல்துறைமின்னஞ்சல்அவதூறு