சமய நம்பிக்கையை அவமதித்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

சமய நம்பிக்கையை அவமதித்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Mar 2026 - 7:50 pm

1 mins read

சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ், ஒருவரின் சமய நம்பிக்கையை அவமதித்ததாக ஆடவர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரு மாதின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் வாசற்படியில் பன்றி இறைச்சியையும் நுழைவாயிற்கதவில் கையால் எழுதப்பட்ட அவதூறான குறிப்பு ஒன்றையும் வைத்து அப்பெண்ணின் இஸ்லாமிய நம்பிக்கையை அவமதித்ததாக டேனியல் கோ, 36, மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் மார்ச் 15ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் நடந்தது.

பாதிக்கப்பட்டவர், தெம்பனிஸ் ஸ்திரீட் 82ல் உள்ள தமது வீட்டின் நுழைவாயிற் கதவைத் திறந்தபோது அவற்றைப் பார்த்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

அந்நாளன்று பிற்பகல் 3.40 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

பிடோக் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கோவை அடையாளங்கண்டு, புகார் அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திலேயே அவரைக் கைது செய்தனர்.

கோவின் வழக்கு மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்திற்கு மிரட்டலாக அமையும் நடவடிக்கைகளைக் கடுமையாக எடுத்துக்கொள்வதாகக் காவல்துறை கூறியது.

ஒருவரின் சமய நம்பிக்கையை அவமதிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்