வானொலிப் படைப்பாளர் ஷேரல் மைல்ஸின் வலது மேற்கையைத் தள்ளியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர்மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தொல்லை கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டையும் வேறொருவரைத் தாக்கியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
52 வயதான வில்லியம் அவ் சின் சாய் ஜூன் 29ஆம் தேதி மாலை 6.20 மணி அளவில் விவோசிட்டி கடைத்தொகுதியில் தனது ஆள்காட்டி விரலைக் கொண்டு ஆடவர் ஒருவரின் முகத்தைத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
அதே நாளன்று அந்த ஆடவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய குற்றச்சாட்டுகளைச் சேர்த்து, தற்போது அவ் தொல்லைக் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டையும், மற்றவர்களைத் தாக்கியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.
ஜூலை 5 அல்லது 11 அன்று ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தின் தளமேடையில் நின்றுகொண்டிருந்தபோது அவ் மாது ஒருவரை வயிற்றில் உதைத்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதியன்று ஐயோன் கடைத்தொகுதிக்கு அருகில் மற்றொரு மாதைத் தலையில் தட்டியதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதே நாளன்று ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் திருவாட்டி மைல்ஸின் வலது மேற்கையைத் தள்ளியதாக அவ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவ் செப்டம்பர் 15ஆம் தேதி குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

