‘சோதனைச்சாவடியில் படம், காணொளி எடுத்தது அவ்வளவு பெரிய குற்றம் எனத் தெரியாது’

‘சோதனைச்சாவடியில் படம், காணொளி எடுத்தது அவ்வளவு பெரிய குற்றம் எனத் தெரியாது’

1 mins read
b5486369-46cd-429e-ba6d-fe214b1c1484
பாதுகாக்கப்பட்ட இடமான உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் படம், காணொளி எடுப்பது குற்றமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பணிபுரிந்துகொண்டிருந்த அதிகாரியைப் படம், காணொளி எடுத்ததாக ஆடவர் ஒருவர் மீது ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது.

அவர் மீது உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

தமது செயல் அவ்வளவு பெரிய குற்றமாகக் கருதப்படும் எனத் தமக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை என்று 37 வயது வோங் ஜியோ வா ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி பிற்பகல் 12.30 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் தடத்தில் அனுமதி பெறாமல் படங்கள், காணொளிகள் எடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட இடமான உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் படம், காணொளி எடுப்பது குற்றமாகும்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை நிறைவுசெய்ய வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசு வழக்கறிஞர்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதி விண்ணப்பம் செய்தனர்.

வோங் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக வோங்கின் கைப்பேசி, தடயவியல் மின்னிலக்கத் திரையிடுதலுக்கு உட்படுத்தப்படும் என்று அறியப்படுகிறது.

குற்றத்தை ஒப்புகொள்ள இருப்பதாகவும் தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞரை நியமிக்கப்போவதில்லை என்றும் வோங் தெரிவித்தார்.

அவர் செம்டம்பர் 23ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் வோங்கிற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்